தூய்மை நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு 123–வது இடம் கடந்த ஆண்டுகளை விட பின்னோக்கி சென்றது
தூய்மை நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு 123–வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டுகளை விட, இந்தாண்டு மதுரை மாநகராட்சி பின்னோக்கி சென்று உள்ளது.
மதுரை,
மத்திய அரசு ஸ்வச் சுராக்ஷன் திட்டத்தின் கீழ் ஆண்டுத்தோறும் தூய்மை நகரங்களுக்கான பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 1 லட்சத்திற்கு அதிகமான மற்றும் குறைவான மக்கள் தொகை என பிரித்து மொத்தம் 4 ஆயிரத்து 23 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் முடிவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாநகராட்சி முதல் இடத்தையும், போபால் 2–வது இடத்தையும், சண்டிகர் 3–வது இடத்தையும் பிடித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ன பத்ரஸ்வரர் மாநகராட்சி கடைசி இடத்தை பிடித்துள்ளது.
தமிழக நகரங்களை பொறுத்தவரை இந்த பட்டியலில் திருச்சி 13–வது இடத்தை பிடித்துள்ளது. மற்ற நகரங்களான கோவை 16–வது இடத்தையும், ஈரோடு–51, சென்னை–100, மதுரை–123, திண்டுக்கல்–124, புதுக்கோட்டை–167, தூத்துக்குடி–171, திருப்பூர்–172, நெல்லை–175, காரைக்குடி–196, கும்பகோணம்–200, பல்லாவரம்–238, சேலம்–244, திருவண்ணாமலை–247, ஆம்பூர்–258, ஒசூர்–264, வேலூர்–285, ராஜாபாளையம்–288, காஞ்சிபுரம் 297–வது இடத்தையும் பிடித்துள்ளது.
மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த 2016–ம் ஆண்டு 26–வது இடத்திலும், 2017–ம் ஆண்டு 57–வது இடத்தையும், இந்தாண்டு 123–வது இடத்தையும் பிடித்து பின்னோக்கி சென்று உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் அதற்கு பலன் கிடைக்க வில்லை.
அதேவேளையில் திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநகராட்சியாக மதுரை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் 100 சதவீதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக ஏற்கனவே மாநகராட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவது தொடர்பாக மத்திய குழு ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் தற்போது மதுரை மாநகராட்சி திறந்த வெளி கழிப்பிடம் இல்லா மாநகராட்சியாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.