மயிலாடுதுறை அருகே இருதரப்பினர் மோதல்; 14 பேர் கைது 8 பேருக்கு வலைவீச்சு

மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் 14 பேரை போலீசார் கைது செய்தனர். 8 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2018-06-24 22:15 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் போலீஸ் சரகம் சேத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் கலியன் (வயது 70). அதே பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சேதுராமன் (32). இவர்கள் 2 பேருக்கும் இடையே அந்த பகுதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா நடத்திய போது கல்வெட்டில் பெயர் சேர்த்தது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் கலியன் தனது மனைவி ராணியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சேதுராமன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த சிலர் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கி, அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுத்த அவருடைய மனைவி ராணியும் தாக்கப்பட்டார். இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த கலியன் தரப்பை சேர்ந்த சிலர், சேதுராமனையும், அவருடைய மனைவி புவனேஸ்வரியையும் தாக்கி, அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பலத்த காயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கலியன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேத்தூர் கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் (38), கணேஷ்குமார் (46), மாதவன் (30), தினேஷ்குமார் (23), ரவி (51), வீரபாண்டியன் (40), தாஸ் (30), சேதுராமன் (32) ஆகிய 8 பேரை கைது செய்து செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக மாரியப்பன், பரமானந்தன், புவனேஸ்வரி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

இதேபோல சேதுராமன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரன் (34), சுந்தர் (30), கோபி (34), ராஜேந்திரன் (59), இளையராஜா (38), மகேந்திரன் (23) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக வரதராஜன், மணிகண்டன், சிற்றரசன், கலியன், ராணி ஆகிய 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்