2-வது திருமணம் செய்து ரூ.72¾ லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

2-வது திருமணம் செய்து ரூ.72¾ லட்சம் மோசடி செய்த வாலிபரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-06-24 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை வசந்தம் நகர் பிள்ளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் சோலை. இவரது மகன் சக்தி கணேஷ் என்ற சோலை கணேசன் (வயது 35). இவருக்கும், சென்னையை சேர்ந்த சீதாலெட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 25.12.2010-ந் தேதி திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்கள் 2 பேரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் சோலை கணேசனுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்ததை தொடர்ந்து அவர் சிங்கப்பூருக்கு சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து சிங்கப்பூரில் வசித்து வரும் சென்னை பரம்பூர் ரமணா நகரை சேர்ந்த சங்கீதாவுடன் (39) சோலை கணேசனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இவர்கள் 2 பேரும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து சோலை கணேசன் சங்கீதாவிடம் இருந்து வீடு மற்றும் நிலம் வாங்க வேண்டும் எனக்கூறி ரூ.72 லட்சத்து 85 ஆயிரம் வரை பணம் வாங்கி உள்ளார்.

பின்னர் சங்கீதாவிடம் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வருவதாகக்கூறிவிட்டு சேலை கணேசன் புதுக்கோட்டைக்கு வந்து உள்ளார். இந்நிலையில் சொந்தஊருக்கு சென்ற கணவர் சோலை கணேசன் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சங்கீதா புதுக்கோட்டைக்கு வந்தார். அப்போது தான் சோலை கணேசனுக்கு முன்பே திருமணம் ஆகி விட்டது. தன்னை 2-வதாக திருமணம் செய்து உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கீதா புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் சோலை கணேசன் முதல் திருமணத்தை மறைத்து, தன்னை 2-வதாக திருமணம் செய்து ரூ.72 லட்சத்து 85 ஆயிரம் பெற்று மோசடி செய்ததாகவும், மேலும் 3-வதாக திருமணம் செய்து உள்ளதாகவும் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் சோலைகணேசன், அவரது தாயார் ராஜம்மாள், சகோதரி கமலாஜோதி, சகோதரர் முருகேசன் மற்றும் உறவினர் நாராயணசாமி ஆகியோர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக் குப்பதிவு செய்து சோலை கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதில் சோலை கணேசன் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்