பண்ருட்டியில் கூலிப்படையினரால் கடத்தப்பட்ட தொழில் அதிபர், காயத்துடன் மீண்டு வந்தார்
பண்ருட்டியில் கூலிப்படையினரால் கடத்தப்பட்ட தொழில் அதிபர் காயத்துடன் மீண்டுவந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பண்ருட்டி,
நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு கடையை பூட்டிவிட்டு, விஜயரங்கன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். காமராஜர் நகர் வடகைலாசம் கூட்டுறவு சங்கம் அருகே சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென விஜயரங்கனின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலைதடுமாறிய விஜயரங்கன், மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். அந்த சமயத்தில் காரில் வந்த 4 பேர், விஜயரங்கனை கடத்திச்சென்றனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கடத்தப்பட்ட விஜயரங்கனை மீட்க 7 தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து 7 தனிப்படையினரும் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, புதுச்சேரி மற்றும் பண்ருட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிரடி விசாரணையை தொடங்கினர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். விடியவிடிய போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். இருப்பினும் விஜயரங்கன் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு நேற்று மதியம் 12.30 மணி அளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் விஜயரங்கன் பேசினார். அப்போது அவர், தான் உயிருடன் இருப்பதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் எனவும், உடனடியாக வீட்டுக்கு வருகிறேன் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதன் தொடர்ச்சியாக விஜயரங்கன், மதியம் 1.10 மணிக்கு அவரது வீட்டுக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது விஜயரங்கன் கூறியதாவது:-
நான் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டேன். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், எனது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. நான் நிலைதடுமாறி கீழே விழுந்தேன். அடுத்த நிமிடத்தில் கார் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து 25 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் 4 பேர் கையில், இரும்பு கம்பியுடன் இறங்கினார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் இரும்பு கம்பியால் என்னை தாக்கினார்கள். உடனே நான் கூச்சலிட்டேன். இந்த சம்பவத்தை அந்த பகுதியினர் வேடிக்கை பார்த்தார்களே தவிர, என்னை காப்பாற்ற ஒருவர் கூட வரவில்லை. உடனே அந்த 4 பேரும் என்னை காரில் தூக்கிப்போட்டு, கடத்திச்சென்றனர். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று நான் கூச்சலிட்டேன். சத்தமிட்டால் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். இருப்பினும் நான் சத்தமிட்டதால், இரும்பு கம்பியால் எனது தலையில் அடித்தனர். பின்னர் அவர்கள், எனது சட்டையை கழற்றி, அதனை கிழித்து வாயில் திணித்தனர். மேலும் கை, கால் மற்றும் கண்களை துணியால் கட்டினர். எனது செல்போனை பிடுங்கி, அதில் இருந்த சிம்கார்டை எடுத்து விட்டனர்.
காமராஜர் நகரில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஓரிடத்தில் மணலில் கார் சக்கரம் சிக்கியது. ½ மணி நேர போராட்டத்துக்கு பின், அந்த காரை மணலில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் ஓரிடத்தில் கார் நின்றது. உடனே எனது கை, கால் மற்றும் கண்களில் கட்டி இருந்த துணியை அவர்கள் அவிழ்த்து விட்டனர். அந்த பகுதி வயல்வெளிகள் நிறைந்த ஒரு மோட்டார் கொட்டகை. அந்த கொட்டகையில் என்னை அடைத்து வைத்தனர்.
பின்னர் சாப்பிட தோசை கொடுத்தனர். அப்போது அவர்கள், உன்னை முக்கியமான நபர் ஒருவர் கூறியதன்பேரில் கடத்தி இருக்கிறோம். அவர் இப்போது இங்கு வருவார். அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி நடந்து கொள். இல்லையெனில் இங்கேயே உன்னை கொன்று விடுவோம் என்று கூறினார்கள். யார் அந்த முக்கிய நபர்? என்று எனக்குள் கேள்வி எழுந்தது. ஆனால் அவர்கள் கூறியபடி, அந்த முக்கிய நபர் வரவில்லை.
நள்ளிரவு 2 மணி இருக்கும், மீண்டும் எனது கை, கால்கள், கண்களை கட்டிவிட்டு காரில் ஏற்றினார்கள். அங்கிருந்து ஒரு மணிநேர பயணத்துக்கு பின், மற்றொரு இடத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு சென்றதும் கட்டுகளை அவிழ்த்து விட்டார்கள். அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு இருந்தது. அதனை சுற்றிலும் முந்திரி தோப்பு இருந்தது. அங்கு விடிய, விடிய விழித்துக்கொண்டிருந்தேன். மறுநாள் காலையில்(அதாவது நேற்று) சாப்பிட உணவு கொடுத்தார்கள். பின்னர் மீண்டும் எனது கண்களை மட்டும் துணியால் கட்டி, காரில் ஏற்றினார்கள். மதியம் 12 மணி அளவில் ஆட்கள் நடமாட்டமில்லாத ஒரு கிராமத்துக்கு சென்றவுடன் அங்கே சாலையில் இறக்கி விட்டு, தேவையில்லாத விஷயங்களில் தலையிடக்கூடாது என்று கூறிமிரட்டிவிட்டு அவர்கள் காரில் சென்று விட்டனர்.
அந்த சமயத்தில் குள்ளஞ்சாவடியை சேர்ந்த எனது நண்பர், அவரது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். மேல்சட்டை இல்லாமல் ரத்தக்கறை படிந்த பேண்டுடன் இருந்ததை கண்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விவரத்தை கேட்டார். அப்போதுதான் அவர்கள் என்னை விட்டுச்சென்ற இடம் குள்ளஞ்சாவடி அருகே பெருமாள் ஏரிக்கரை ஆணையம்பேட்டை செல்லும் சாலை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர், என்னை அழைத்துச்சென்று மாற்று உடை கொடுத்தார். அவரது செல்போன் மூலமாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தேன்.
அவர்கள் என்னை கடத்தியது, அவர்கள் பேசிக்கொண்டதை வைத்து பார்க்கும்போது என்னை யாரோ ஒருவர் கடத்த சொல்லி இருக்கிறார். அதன்படி கூலிப்படையான அவர்கள், என்னை கடத்தி இருக்கிறார்கள். ஆனால் என்னை கடத்தச்சொன்னது யார்?, எதற்காக கடத்தினார்கள்? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து விஜயரங்கன், பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி பண்ருட்டி போலீசாரும், 7 தனிப்படை போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.