காதல் திருமணம் செய்த வாலிபர் சாவில் திடீர் திருப்பம் கொலை செய்ததாக உறவினர்களிடம் போலீசார் விசாரணை

காதல் திருமணம் செய்த வாலிபர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை கொலை செய்ததாக உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-06-24 21:00 GMT

தூத்துக்குடி, 

காதல் திருமணம் செய்த வாலிபர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை கொலை செய்ததாக உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–

காதல் திருமணம்

தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் விக்ரமன் மகன் ஹரிக்குமார் (வயது 27). எலக்ட்ரீசியனான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிதா (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான்.

திருமணத்திற்கு பின்னர் ஹரிக்குமார் தனது மனைவி, மகனுடன் தூத்துக்குடி அண்ணாநகர் 10–வது தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். ஹரிக்குமாருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தற்கொலை வழக்குப்பதிவு

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் கவிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து கவிதாவை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவியின் தற்கொலை முயற்சிக்கு நான் தான் காரணம் என்று நினைத்து மனமுடைந்து ஹரிக்குமார் காணப்பட்டார்.

கடந்த 22–ந் தேதி காலையில் மில்லர்புரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் ஹரிக்குமார் இறந்த நிலையில் கிடந்தார். இதை அந்த பகுதி மக்கள் பார்த்து தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஹரிக்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர்.

கொலை வழக்காக மாற்றம்

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஹரிக்குமார் இரும்பு கம்பியால் அடிக்கப்படும், கழுத்தை நெறித்தும் கொலை செய்யப்பட்டதற்கான முகாந்திரங்கள் இருந்ததாக தெரியவந்தது. இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக கவிதாவின் உறவினர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்