மீன் பிடிக்க அனுமதி கிடைக்காததால் பாம்பன் மீனவர்கள் ஏமாற்றம்

மீன் பிடிக்க அனுமதி கிடைக்காததால் பாம்பன் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2018-06-24 22:45 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் கடந்த 1 வாரமாக சூறாவளி காற்று வீசி வந்ததுடன்,கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வந்தது.இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக ராமேசுவரம் பகுதியில் உள்ள விசைப் படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன்துறை அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட வில்லை.

இதனால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன.இதனால் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வேலை வாய்ப்பை இழந்து பசி பட்டினியால் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ராமேசுவரம்,பாம்பன் பகுதிகளில் காற்றின் வேகம் குறைந்து கடல் கொந்தளிப்பும் குறைந்து விட்டது.

இந்நிலையில் பாம்பனில் நேற்று தென் கடலான மன்னார் வளைகுடா கடல்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல விசைப்படகு மீனவர்கள் தயாராக இருந்த நிலையில் நேற்று 6-வது நாளாக பாம்பன பகுதி விசைப்படகு மீனவர்களுக்கு மீன் பிடிக்க செல்ல மீன்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுபற்றி பாம்பன் விசைப்டகு மீனவர் சங்கபிரதிநிதி பேட்ரிக் கூறியதாவது:- காற்றின் வேகத்தை காட்டி கடந்த 6 நாட்களாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப் பட்டுஉள்ளது. ஆனால் கடந்த 2 நாட்களாக காற்றின் வேகம் குறைந்துள்ளதுடன் கடல் அலைகளின் வேகமும் குறைந்து விட்டது.

61 நாள் தடை காலம் முடிந்து ஒரு நாள் மட்டுமே மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வந்துள்ள நிலையில் தொடர்ந்து மீன் பிடிக்க அதிகாரிகள் அனுமதி வழங்காமல் இருப்பதால் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வேலை இழந்து பசி பட்டினியால் தவித்து வருகின்றனர்.எனவே மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் வழங்க வேண்டும் என மீனவர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்