180 வகை தோசைகள்

180 வகையான தோசைகள் தயாரித்து அசத்துகிறார்கள் ‘பாய் சகோதரர்கள்’.

Update: 2018-06-24 09:56 GMT
தோசைகள் இப்படியெல்லாம்  தயார் செய்ய முடியுமா? என்று ஆச்சரியப்படும் வகைகளில் அனைத்து வகையான சமையல் பொருட்களையும் தோசையில் சேர்த்து ருசித்துசாப்பிடும்படி வழங்குகிறார்கள்.

கொச்சியில் இயங்கும் இவர்களுடைய உணவகம் தோசைக்கு புதிய அடையாளமாக திகழ்கிறது. நரசிம்மா, புருஷோத்தமா, சிவானந்தா மற்றும் அனந்த பாய் ஆகிய நான்கு சகோதரர்கள் இந்த உணவகத்தை நிர்வகிக்கிறார்கள். ஒவ்வொரு தோசைக்கும் ஒவ்வொரு சிறப்பு பெயர்களை வைத்திருக்கிறார்கள். அவற்றுள் வழக்கமாக வந்து சாப்பிடும் வாடிக்கையாளர்களின் பெயர்களும் அடக்கம்.

குறிப்பாக எஸ்.ஐ. பரதன் என்ற தோசை அங்கு பிரசித்தமானது. ஆனால் அது போலீஸ் அதிகாரியின் பெயர் அல்ல. அதுபற்றி உணவகத்தின் செப், கே. பிரபு சொல்கிறார். ‘‘வழக்கமாக வரும் வாடிக்கையாளர் ஒருவர் காரமான தோசை வேண்டும் என்று கேட்பார். வழக்கமான முட்டைக்கு பதில் காடை முட்டையை தோசையில் ஊற்றி கொடுப்போம். அதனை விரும்பி சுவைப்பார். அவர் போலீஸ் அதிகாரி கிடையாது. ஆனால் பார்ப்பதற்கு போலீஸ் மாதிரி இருப்பதால் எஸ்.ஐ. என்பதை அவருடைய பெயருக்கு முன்பாக அடைமொழியாக்கி அழைக்க தொடங்கினோம். அதை பார்த்து மற்ற வாடிக்கையாளர்களும் அந்த தோசையை விரும்பி கேட்டார்கள். அதனால் எஸ்.ஐ. பரதன் தோசை பிரபலமாகிவிட்டது.

அதேபோல் புதுமையான தோசைகளை தயார் செய்வதற்கு ஆர்வம் காட்டினோம். நண்பர்கள் மூலம் அவைகளை பரிசோதித்து பார்த்தோம். அவர்கள் சாப்பிட்டுபார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டார்கள். மற்றவர்களுக்கும் அதன் சுவை பிடித்திருந்தது. இப்போது எல்லோரும் விரும்பும்படியான தோசைகள் தயாரிப்பதற்கு பழகிவிட்டோம். ஒவ்வொரு தோசைக்கும் சேர்க்கும் மசாலா பொருட்கள் தனித்துவமான சுவையை ஏற் படுத்தி கொடுக்கிறது. வார இறுதி நாட்களில் முருங்கை இலையை பயன்படுத்தி தோசை தயாரிக்கிறோம்’’ என்கிறார்.

ஆரம்பத்தில் இந்த சகோதரர்கள் சாலையோரத்தில் கடை நடத்தி வந்திருக்கிறார்கள். அப்போது 6 வகையான தோசைகளை தயாரித்து வழங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தாங்கள் விரும்பும் மசாலா பொருட்களை தோசையில் கலந்து வழங்குமாறு கேட்டதால் இவர்களும் விதவிதமான தோசைகளை உருவாக்க தொடங்கி இருக்கிறார்கள்.

இப்போது 180 வகையான தோசைகள் இவர்களின் கைவண்ணங்களில் விதவிதமான சுவையில் மிளிர்கின்றன. அவற்றின் தோற்றமும், அதில் கலந்திருக்கும் பொருட்களின் வாசமும் தோசைக்கு கூடுதல் ருசியை ஏற் படுத்தி கொடுக்கிறது. காய்கறிகள், முட்டைகள், முந்திரி பருப்புகள், பாலாடை கட்டி, சாக்லேட், தேங்காய், மில்க் ஷேக் உள்பட சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் அத்தனை பொருட்களையும் தோசையில் பரிமாறி விடுகிறார்கள். சட்னிக்கு மாற்றாக விதவிதமான மசாலா வகைகளை வழங்குகிறார்கள். 

மேலும் செய்திகள்