பெண் ஆளுமைகள்
கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் மாவட்ட நிர்வாகத்தில் உயர் பதவிகள் அனைத்தையும் பெண்களே நிர்வகிக்கிறார்கள்.;
வரலாற்று சிறப்புகளையும், கலாசார பின்னணிகளையும் ஒருங்கே பிரதிபலிக்கும் திருச்சூர் பூரம் உலகப் புகழ் பெற்றது. மேலும் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கும் திருச்சூர் மாவட்டத்தின் முழு நிர்வாகத்தையும் பெண்கள் வழி நடத்துவது பெண் ஆளுமைக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர், மேயர், துணை மேயர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் கேரள போலீஸ் அகாடமி இயக்குனர் உள்ளிட்ட அனைத்து உயர் பதவிகளையும் பெண்களே நிர்வகிக் கிறார்கள். கலெக்டர் டி.ஏ. அனுபமா ஐ.ஏ.எஸ். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.
2009-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். திருச்சூரில் உள்ள பள்ளியில்தான் உயர்கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. துணை கலெக்டரான டாக்டர் ரேணு ராஜின் பூர்வீகம் கோட்டயம். மருத்துவர் படிப்புக்கு படித்த இவர் அரசு பணியில் இணைந்து சமூக சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் 2014-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதினார். அதில் இரண்டாவது இடம் பெற்று ஐ.ஏ. எஸ். அதிகாரியாகிவிட்டார். பரதநாட்டிய கலைஞரான இவர் மாவட்டத்தில் நடந்த இளைஞர் கலைவிழாக்களிலும் பங்கேற்று இருக்கிறார்.
திருச்சூர் ராமவர்மபுரத்தில் அமைந்திருக்கும் கேரள மாநில போலீஸ் அகாடமியின் இயக்குனர் பி.சந்தியா பி.எச்டி பட்டம் பெற்றவர். தைரியமிக்க பெண்மணியான இவர் பரபரப்பான பல வழக்குகளை திறம்பட கையாண்டவர். ஏராளமான நாவல்கள், குழந்தைகளுக்கான புத்தகங்களும் எழுதியுள்ளார். காவல்துறை சார்ந்த பல ஆராய்ச்சி கட்டுரை களையும் சமர்ப்பித்துள்ளார்.
மாநகராட்சி மேயர் பதவியை வகிப்பவர் அஜிதா ஜெயராமன். கடந்த 33 ஆண்டுகளாக சமூக சேவையில் தன்னை இணைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். எர்ணாகுளம் மூதகுன்னம் பகுதியை சேர்ந்த இவர் இரண்டாவது பெண் மேயர் என்ற சிறப்பை பெற்றவர். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மேரி தாமஸ், துணை மேயர் பீனா முரளி என திருச்சூர் மாவட்ட நிர்வாகத்தில் பெண்கள் முக்கிய அங்கம் வகிக்கிறார்கள்.