8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு: சேலத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மேடையில் பெண் விவசாயி கண்ணீர் விட்டு கதறல்

8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Update: 2018-06-23 23:41 GMT
சேலம்,

சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கருத்தை கேட்டு அதை செயல்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் சேலம் மாவட்டத்தில் பசுமை சாலைக்கு தேவையான நிலங்களை அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும், இந்த திட்டத்துக்கு எதிராகவும், பொதுமக்களை போராட்டத்துக்கு தூண்டியதாகவும் நடிகர் மன்சூர் அலிகான் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். இதனால் விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்றும், மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கும் வகையிலும் சேலத்தில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் சேலம்-சென்னை பசுமை சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கல் நடும் தமிழக அரசை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்பு

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர், விவசாயிகள், பாதிக்கப்படும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், அவர்கள் பசுமை சாலைக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசியதாவது:-

தி.மு.க. துணை நிற்கும்

பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக சேலம் உள்பட 5 மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. பொதுவாக நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். ஆனால் தற்போது பிரதமர் மோடியின் சட்டத்தால் முன் அறிவிப்பின்றி நிலம் கையகப்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கும் இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்.

கூடங்குளம் அணுமின் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை, பசுமை வழிச்சாலை, கெயில் திட்டம், தனியார் மின்சார கேபிள் வயர் பதிப்பது உள்பட பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளது. தமிழக மலைகளில் இரும்பு தாதுக்கள் அதிகமாக உள்ளது. அதனை எடுத்து செல்ல வசதியாக இந்த சாலை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு அமைக்கிறது. விவசாய நிலத்தை பறிக்க விடாமல் விவசாயிகளுக்கு தி.மு.க. துணை நிற்கும். தூத்துக்குடி போல துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தாலும் இங்கு முதல் ஆளாக நான் நிற்பேன். விவசாயிகள் கவலைப்படாமல் தைரியமாக இருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேடையில் பெண் விவசாயி கதறல்

முன்னதாக ஆர்ப்பாட்ட மேடையில் வெள்ளியம்பட்டியை சேர்ந்த பெண் விவசாயி லட்சுமி பேசும்போது, எனது 5 ஏக்கர் நிலம் பறிபோகிறது. நிலத்திற்கு பதிலாக வீடு, வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இதை வைத்து என்ன செய்வது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எனது தந்தையாக நினைத்து கேட்கிறேன். விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும், எனக்கூறி மேடையில் கண்ணீர்விட்டு கதறி அழுதார். மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர், மரவள்ளிக்கிழங்கு, வாழை மரங்கள், சோளம், கொய்யா, தக்காளி போன்ற பயிர்களை கொண்டு வந்திருந்தனர். ஏர் கலப்பையுடன் மாடுகளையும் அழைத்து வந்திருந்ததை காணமுடிந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன், தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், மாநகர செயலாளர் ஜெயக்குமார், சேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன், வக்கீல் அண்ணாமலை, முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி, ஓமலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. மீனவர் அணி துணை அமைப்பாளர் எம்.பி.மணி, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் சங்கர், ஊராட்சி செயலாளர் கோபால் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்