தம்மம்பட்டியில் ரூ.15 லட்சம் கடனை திருப்பி தருவதாகக்கூறி டாக்டரை தாக்கி கை, கால்களை கட்டி சாலையோரம் வீசி சென்ற கும்பல்

தம்மம்பட்டியில் ரூ.15 லட்சம் கடனை திருப்பி தருவதாக கூறி டாக்டரை தாக்கி கை, கால்களை கட்டி சாலையோரம் ஒரு கும்பல் வீசி சென்று விட்டது.;

Update: 2018-06-23 23:37 GMT
சேலம், 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பாலசந்தானம் (வயது 36). ஆயுர்வேத டாக்டரான இவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை 6.30 மணிக்கு அயோத்தியாப்பட்டணம் அருகே ஆச்சாங்குட்டப்பட்டி- அரூர் மெயின்ரோட்டில் சாலையோரம் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் டாக்டர் பாலசந்தானம் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அவருக்கு உடலில் காயங்கள் இருந்ததால் உடனடியாக 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், ஆஸ்பத்திரியில் மயக்க நிலையில் இருந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் டாக்டர் பாலசந்தானம் மயக்கம் தெளிந்து சகஜநிலைக்கு திரும்பினார்.

கட்டிப்போட்டு தாக்குதல்

அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு தகவல்களை கூறினார். அதில், தம்மம்பட்டியை சேர்ந்த ஆயில் மில் நடத்திவரும் சரவணன் என்பவருக்கு ரூ.15 லட்சம் கடன் கொடுத்திருந்தேன். கடந்த 20-ந் தேதி பணத்தை வாங்கி செல்லுமாறு எனக்கு அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. இதையடுத்து என்னுடைய மோட்டார் சைக்கிளில் தம்மம்பட்டிக்கு சென்றேன். பின்னர், அங்குள்ள ஒரு குடோனுக்கு சிலர் அழைத்து சென்றனர். பிறகு எனது கை, கால்களை கட்டிப்போட்டு இருட்டு அறையில் வைத்து ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கினர். 2 நாட்கள் ஒரு அறையில் வைத்து கொடுமைப்படுத்தினர்.

இதனால் மயங்கிய நிலையில் இருந்த என்னை, காரில் ஏற்றி சாலையோரம் வீசிவிட்டு சென்றுவிட்டார்கள் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், டாக்டர் பாலசந்தானம் கூறியது உண்மையா? அல்லது அவர் நாடகம் ஆடுகிறாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்