கோவை அருகே 4 வழிச்சாலை மேம்பாலத்தில் வேலை செய்த போது வடமாநில வாலிபர் தவறி விழுந்து சாவு
கோவை அருகே கிணத்துக்கடவில் 4 வழிச்சாலை மேம்பாலத்தில் வேலை செய்த போது தவறி விழுந்த வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவில் கோவை- பொள்ளாச்சி இடையே உள்ள 26.85 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலை 4 வழிச்சாலையாக மாற்றும்பணி கடந்த 2016-ம் ஆண்டுமுதல் நடைபெற்றுவருகிறது. இந்தபணிகளை பெங்களூருவை சேர்ந்த ஒரு தனியார்நிறுவனம் மேற்கொண்டுவருகிறது. இதில் கோவை -பொள்ளாச்சி இடையே கான்கிரீட் சாலையும், கிணத்துக்கடவு, முள்ளுப்பாடிரெயில்வே கேட், ஒத்தக்கால்மண்டபம் ஆகிய இடங்களில் மேம்பாலமும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தபணியில் சுமார் 160-க் கும் மேற்பட்ட வடமாநிலதொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்த தொழிலாளர்கள் காலை முதல் மாலைவரை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் கிணத்துக்கடவு பஸ்நிறுத்தம்பகுதியில் மேம்பாலம் அமைக் கப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிக்காக பொருத்தப்பட்டிருந்த கான்கிரீட் கட்டுமான இரும்புக்கம்பிகளை அகற்றும் வேலையில் 3 வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
பரிதாப சாவு
அப்போது ஒரு வாலிபர் திடீரென மேம்பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வேனுக்கு போன் செய்தனர். ஆனால் வேன் வருவதற்கு தாமதம் ஆனது. உடனே சக ஊழியர்கள் அவரை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து போன வாலிபர் மேற்கு வங்காள மாநிலம் நதியா மாவட்டம் பஜ்கர் கிராமத்தை சேர்ந்த பிரசாந்ராய் (வயது 21) என்பது தெரியவந்தது.
கண்காணிக்க வேண்டும்
இதற்கிடையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த பிரசாந் ராயை சக ஊழியர்கள் மீட்டபோது திடீரென பாலத்தின் அடியில் இருந்து மற்றொரு கம்பி கீழேவிழுந்தது. இந்த கம்பி அங்கிருந்தவர்கள் மீது விழாமல் சற்று தள்ளி விழுந்ததால் மற்ற தொழிலாளர்கள் உயிர் தப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கிணத்துக்கடவு பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேம்பாலம் அமைக்கும் பணிகளில் அந்தரத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புக்கு எந்த உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபட்டுவருவதால் இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறுகிறது.
ஆகவே இது குறித்து உயர் அதிகாரிகள் பார்வையிட்டு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு முறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்பாவி தொழிலாளர்கள் பலியாவது தொடர்கதையாகிவிடும். மேலும் தற்போது இறந்த வாலிபர் குடும்பத்துக்கு உரிய நிவாரண தொகைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.