சீனாவின் மார்க்கெட்டை இழந்ததால் ‘பருத்தி நூல் ஏற்றுமதி குறைந்துள்ளது’ மேம்பாட்டு கவுன்சில் தலைவர் பேட்டி
சீனாவின் மார்க்கெட்டை இழந்ததால், பருத்தி நூல் ஏற்றுமதி குறைந்துள்ளது என்று கோவையில் பருத்தி நூல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் கூறினார்.
கோவை,
கோவையில் தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் பருத்தி நூல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் உஜ்வால் ஆர்.லோகித் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகின் மொத்த பருத்தி நூல் தேவையில் 26 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்கிறது. கடந்த 2013-14-ம் ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தியான மொத்த பருத்தி நூலில் மூன்றில் ஒரு பங்கான 1,310 மில்லியன் கிலோ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பல்வேறு சலுகை களை வாபஸ் பெற்றதால் 2017-18-ம் ஆண்டுகளில் பருத்தி நூல் ஏற்றுமதி 1097 மில்லியன் கிலோவாக குறைந்து விட்டது.
மார்க்கெட்டை இழந்து விட்டது
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வியட்நாம் நாடு பருத்தி நூல் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்து குறிப்பாக சீனாவின் மார்க்கெட்டை பிடித்துள்ளது. இதனால் இந்தியா, சீனாவின் மார்க்கெட்டை இழந்து விட்டது. கடந்த 2013-14-ம் ஆண்டுகளில் இந்தியா சீனாவுக்கு 603 மில்லியன் கிலோ பருத்தியை ஏற்றுமதி செய்தது. ஆனால் 2017-18-ம் ஆண்டுகளில் அது 315 மில்லியன் கிலோவாக குறைந்து விட்டது.
ஆனால் வியட்நாம் நாடு சீனாவுக்கு 2013-14-ம் ஆண்டுகளில் 287 மில்லியன் கிலோ பருத்தியை ஏற்றுமதி செய்தது. அதுவே 2017-18-ம் ஆண்டுகளில் 718 மில்லியன் கிலோவாக அதிகரித்துள்ளது. உலகிலேயே பருத்தி நூலை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு சீனா. உலகில் உற்பத்தியாகும் பருத்தி நூலின் மொத்த விளைச்சலில் 47 சதவீதத்தை அந்த நாடு வாங்கி கொள் கிறது.
முக்கிய பங்கு
பருத்தி நூலை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறைந்தால் அது பருத்தி வியாபாரத்தில் பெரும் பாதிப் பை ஏற்படுத்தும். சீனாவுக்கு பருத்தி நூல் ஏற்றுமதி குறைந்துள்ளதால் அதை சரி செய்வது எப்படி? ஏற்றுமதியை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்று ஆய்வு செய்து வருகிறோம்.
பருத்தி நூல் ஏற்றுமதியாளர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு இதுவரை விதித்துள்ள அனைத்து வரிகளையும் திரும்ப பெற வேண்டும். இதன் மூலம் இந்திய பருத்தி நூல் ஏற்றுமதியாளர்கள் உலக மார்க்கெட்டில் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.