கோவை வந்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் வக்கீல் சங்கத்தினர் மனு
கோவை வந்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம், காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வக்கீல்கள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
கோவை,
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நாமக்கல், பல்லடம், பெருந்துறை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கோர்ட்டு கட்டிடங்களை திறந்து வைப்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவரிடம் கோவை வக்கீல்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சுதீஷ், பொருளாளர் ரவிச்சந்திரன், கோவை பெண் வக்கீல்கள் சங்க தலைவி தேன்மொழி மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்ட நீதிபதியாக பதவி வகித்து வந்த பொங்கியப்பன் பதவி உயர்வு பெற்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக சென்று விட்டார். பின்னர் அந்த பொறுப்பை வகித்து வந்த நீதிபதி கிறிஸ்டோபரும் சேலத்துக்கு மாற்றப்பட்டு விட்டார்.
இதைத்தொடர்ந்து கோவை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி குணசேகரன் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். அவர் தான் மாவட்ட நீதிபதி பதவியையும் வகித்து வருகிறார்.
வழக்குகள் தேக்கம்
மாவட்ட நீதிபதி பதவி காலியாக உள்ளதால் அன்றாட நிர்வாக பணிகள் தேங்கி உள்ளன. மேலும் முதன்மை குடும்ப நல கோர்ட்டு, இன்றியமையா பொருட்கள் கடத்தல் தடுப்பு கோர்ட்டு, கூடுதல் மகளிர் நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளன.
சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நீதிமன்றமாக உள்ள கோவை நீதிமன்றத்தில் பல நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் வழக்குகள் தேக்கம் அடைந்து வருகின்றன. எனவே காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
வாகன நிறுத்துமிடம்
கோவை வக்கீல்கள் சங்கத்தில் 2,500 வக்கீல்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் தங்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லை. எனவே கோவை கோர்ட்டு வளாகத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் வக்கீல்களுக்கு கூடுதலாக அலுவலக அறைகள் மற்றும் மாநாட்டு கூடம் ஆகியவற்றையும் கட்டித் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.