திருப்பூர்-கோவை மாவட்டங்களில் சொகுசு கார்களை திருடிய ஆசாமி கைது
திருப்பூர்-கோவை மாவட்டங்களில் பல்வேறு சொகுசு கார்களை திருடிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் பொங்கியாந்தோட்டத்தில் வசிப்பவர் சுப்பிரமணியம் (வயது 82). இவர் கடந்த 10.5.2018 அன்று அவினாசியில் உள்ள ஒரு வங்கியில் தனது கணக்கிலிருந்து ரூ.35 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மொபட்டில் சென்றார். அவினாசி மேற்குரத வீதி சந்திப்பில் வந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி ஒருவன் சுப்பிரமணியத்தின் கவனத்தை திசை திருப்பி அவரது மொபட்டில் வைத்திருந்த ரூ.35 ஆயிரத்தை திருடிச்சென்றான்.
இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவராஜன் (அவினாசி), கிருஷ்ணகுமார் (சேவூர்), மற்றும் போலீசார் துரை, முருகன் ஆகியோர் நேற்று அவினாசியை அடுத்த தெக்கலூரில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியே வேகமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி அதை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவினாசி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் கோவை மாவட்டம் சூலூர் முத்துகவுண்டன்புதூரை சேர்ந்த பிரபாகரன் மகன் மணிகண்டன் (வயது 34) என்பதும், முதியவர் சுப்பிரமணியத்திடம் ரூ.35 ஆயிரத்தை திருடியது மற்றும் சென்னையை சேர்ந்த ஷியாம்தேவராஜன் (48) என்பவர் திருப்பூர் வீரபாண்டியில் தனது காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றபோது அந்த காரை திருடிக்கொண்டு தப்பியதும் தெரியவந்தது. மேலும் ஒருவருடைய காசோலையை பயன்படுத்தி கார் வாங்கியதோடு, கோவை மாவட்டத்தில் சூலூர் மற்றும் ரேஸ்கோர்ஸ் உள்பட பல ஊர்களில் 20-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடியதும், இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
எந்த வழக்கிலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இவர் நேற்று அவினாசி போலீசாரிடம் சிக்கினார். இதனையடுத்து அவினாசி போலீசார் மணிகண்டனை கைது செய்து ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவரிடமிருந்து சொகுசு கார் மற்றும் ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.