மணல் கடத்தலை தடுத்த தாசில்தாரை தாக்கிய 2 பேர் கைது

மணல் கடத்தலை தடுத்த தாசில்தாரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-06-23 22:27 GMT
திருத்தணி,

திருத்தணி அருகே உள்ள கார்த்திகேயபுரம் சாலையில் லாரிகள் மூலம் மணல் கடத்தப்படுவதாக திருத்தணி தாசில்தார் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி திருத்தணி தாசில்தார் நரசிம்மன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கரவேலு, அம்பரீஷ், கோடீஸ்வரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக சென்ற லாரியை நிறுத்தினர். அப்போது லாரி நிற்காமல் வேகமாக சென்று விட்டது. மேலும் லாரியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபரும் வேகமாக சென்றார். இருப்பினும் தாசில்தார் மற்றும் அலுவலர்கள் அந்த லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணை நடத்தும்போது லாரி டிரைவரும், மோட்டார் சைக்கிளில் வந்த நபரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென தாசில்தார் நரசிம்மன் மற்றும் உடன் இருந்த கிராம நிர்வாக அலுவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக அங்கு சென்று தாசில்தாரை தாக்கிய நபர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் அரக்கோணம் தாலுகாவில் உள்ள சாலை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் அரவிந்தகுமார் (வயது 22), என்பதும் மோட்டார் சைக்கிளில் வந்த நபரின் பெயர் விஜயகுமார் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்