மராட்டியத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட் களுக்கான தடை அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2018-06-23 23:00 GMT
மும்பை, 

மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட் களுக்கான தடை அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தடை அமலுக்கு வந்தது

மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து மாநில அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மார்ச் 23-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், கரண்டிகள், தண்ணீர் பாட்டில்கள், தெர்மாக்கோல் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்படுவதாக உத்தரவில் அரசு குறிப்பிட்டு இருந்தது.

மேலும் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த 3 மாதம் கால அவகாசமும் வழங்கி இருந்தது.

மும்பையில் மாநகராட்சியினர் அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பிளாஸ்டிக் பொருட்களை பெற்று மறுசுழற்சிக்கு அனுப்பினர். இந்தநிலையில் மாநில அரசு வழங்கிய கால அவகாசம் முடிந்து நேற்று முதல் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்தது.

அபராதம், ஜெயில்

பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளதால் இனிமேல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முடியாது. தடையை மீறுபவர்களுக்கு முதல் தடவை ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இரண்டாம் தடவை ரூ.10 ஆயிரம் அபராதமும், மூன்றாவது தடவை சிக்கினால், சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தடை அமலுக்கு வந்ததையடுத்து மாநிலம் முழுவதும் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தும் பணியை தொடங்கினர். மும்பையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்களை பிடிக்க 200 மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் நீல நிற மேலாடை (கோட்), தொப்பி அணிந்து இருப்பார்கள். முதலில் இவர்கள் வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விழிப்புணர்வு

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக மும்பை ஒர்லியில் அரசு சார்பில் பிரமாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடக்கிறது. இதில் பொது மக்கள் எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம், எதையெல்லாம் பயன்படுத்த கூடாது மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எதை பயன்படுத்தலாம் என்பது குறித்து விளக்கி கூறப்படும்.

பொதுமக்கள் பிளாஸ்டிக் தடை குறித்த சந்தேகங்களை 1800222357 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இதேபோல பொது மக்கள் ‘plastic bandi' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பிளாஸ்டிக் தடை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

பாலித்தீன் பைகளுடன்...

இதற்கிடையே நேற்று முதல் தடை அமலுக்கு வந்தபோதும் பலர் பாலித்தீன் பைகளுடன் நகரில் சுற்றித்திரிந்ததை காண முடிந்தது. மேலும் இந்த தடை வியாபாரிகளிடமும் அதிக குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கிராபர்டு மார்க்கெட் பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், “ அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது வரவேற்க தகுந்த ஒன்று தான். ஆனால் பிளாஸ்டிக்கிற்கு மாற்று என்ன இருக்கிறது. நாங்கள் பிழைப்பிற்கு என்ன செய்ய முடியும் ” என்றார்.

மேலும் செய்திகள்