அண்ணா நகரில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்ற நடிகையிடம் செல்போன் பறிப்பு
அண்ணாநகரில், உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனா சிங்கிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்துச்சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்
பூந்தமல்லி,
‘ரேனிகுண்டா’ என்ற தமிழ்ப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை சஞ்சனா சிங். இவர் ‘அஞ்சான்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். மேலும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று உள்ளார்.
சென்னை முகப்பேரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சஞ்சனா சிங், தினந்தோறும் அதிகாலையில் சைக்கிள் சவாரி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று அதிகாலையும் வழக்கம்போல் அவர் சைக்கிள் சவாரி மேற்கொண்டார். பின்னர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு செல்ல முடிவு செய்து, தனது விலை உயர்ந்த செல்போனில் வழிகாட்டும் செயலியை கையில் வைத்து பார்த்தபடியே சைக்கிளை ஓட்டிச்சென்றார்.
செல்போன் பறிப்பு
அண்ணா நகர், சிந்தாமணி சிக்னல் அருகே சென்றபோது, அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், திடீரென சஞ்சனா சிங் கையில் இருந்த அவரது விலை உயர்ந்த செல்போனை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சனா சிங், செல்போனை மீட்கவும், கொள்ளையனை மடக்கி பிடிக்கவும் தனது சைக்கிளில் வேகமாக விரட்டிச்சென்றார். ஆனால் மோட்டார் சைக்கிள் வேகத்துக்கு அவரால் ஈடுகொடுக்க முடியாததால் கொள்ளையனை பிடிக்க முடியாமல் சிறிது தூரம் விரட்டிச்சென்று நின்று விட்டார்.
இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் சஞ்சனா சிங் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செல்போன் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.