சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து திறந்த வெளியில் கழிவுநீர் வெளியேற்றம் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

ஆதம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து திறந்த வெளியில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டது.

Update: 2018-06-23 21:45 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை குழாய்களில் வெளியேறும் கழிவுநீர் முழுவதும் ஆதம்பாக்கம் நிலமங்கை நகரில் உள்ள சென்னை குடிநீர் வாரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து ராட்சத குழாய் மூலமாக பெருங்குடிக்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் புழுதிவாக்கம் பஸ் நிலையம் அருகே சாலை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக தனியார் செல்போன் நிறுவனம் கேபிள் பதிக்கும் பணியின் போது கழிவுநீர் செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் அதில் இருந்து அதிகளவில் கழிவுநீர் வெளியேறி புழுதிவாக்கம் பகுதியில் ஆறாக ஓடியது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

துர்நாற்றம் வீசியதால் அவதி

இது பற்றி தகவல் அறிந்து வந்த ஆலந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன், கழிவுநீர் குழாய் உடைந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கழிவுநீரை குழாய் மூலமாக வெளியேற்றாமல் தற்காலிகமாக வீராங்கல் ஓடை வழியாக வெளியேற்றும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆதம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 2 குழாய்கள் வழியாக வீராங்கல் ஓடைக்கு கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் இதற்காக தற்காலிகமாக கால்வாய் அமைக்கப்படாமல் திறந்த வெளியில் வெளியேற்றப்பட்டதால், அந்த பகுதியில் உள்ள காலி இடத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசத்தொடங்கியது.

இதனால் ஆதம்பாக்கம் நிலமங்கை நகர், கூட்டுறவு நகர், பாரதிதாசன் நகர், வேல் நகர், ராகவ் அவென்யூ, இன்கம்டாக்ஸ் காலனி உள்பட அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

முற்றுகை

இந்தநிலையில் நேற்று ஆதம்பாக்கத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த ஆலந்தூர் பகுதி சென்னை குடிநீர் வாரிய பொறியாளர் விஜயகுமாரி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தற்காலிக ஏற்பாடுதான். கழிவுநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்ட உடன் கழிவுநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்படும் என்றார்.

ஆனால் தொடர்ந்து கழிவுநீர் சாலைகளில் வெளியேற்றப்படுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

கால்வாய் அமைத்து வெளியேற்றம்

அப்போது இந்த பகுதிகளை முன்னாள் எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன், முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.நரேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், அங்குள்ள காலி இடங்களில் கழிவுநீர் தேங்காமல் வீராங்கல் ஓடைக்கு செல்லும் வகையில் தற்காலிகமாக கால்வாய் ஏற்படுத்தி அதன்வழியாக கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இதனால் கழிவுநீர், தேங்காமல் வீராங்கல் ஓடைக்கு சென்றது. இதையடுத்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இது பற்றி ஆலந்தூர் பகுதி சென்னை குடிநீர் வாரிய பொறியாளர் விஜயகுமாரி கூறும்போது, “கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பெருங்குடிக்கு செல்லும் கழிவுநீர் குழாயில் புழுதிவாக்கம் பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் கேபிள் பதிக்கும்போது உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாய் சீரமைப்பு பணிக்காக கழிவுநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் பெருங்குடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இவற்றை நிறுத்தினால் சுத்திகரிப்பு நிலையம் அருகில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவேதான் தற்காலிகமாக வீராங்கால் ஓடைக்கு வெளியேற்றப்படுகிறது. இன்னும் 2 நாட்களில் இந்த நிலை சீரடைந்துவிடும்” என்றார். 

மேலும் செய்திகள்