பெங்களூரு, மங்களூரு, மைசூரு, உப்பள்ளி உள்பட கர்நாடகத்தில் 115 ரெயில் நிலையங்களில் இலவச ‘வை–பை’ வசதி

பெங்களூரு, மங்களூரு, மைசூரு, உப்பள்ளி உள்பட கர்நாடகத்தில் புதிதாக 115 ரெயில் நிலையங்களில் இலவச ‘வை–பை‘ வசதியை அறிமுகப்படுத்தி தென்மேற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2018-06-23 22:00 GMT

பெங்களூரு, 

பெங்களூரு, மங்களூரு, மைசூரு, உப்பள்ளி உள்பட கர்நாடகத்தில் புதிதாக 115 ரெயில் நிலையங்களில் இலவச ‘வை–பை‘ வசதியை அறிமுகப்படுத்தி தென்மேற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

115 ரெயில் நிலையங்களில் ‘வை–பை’

மத்திய அரசு ‘டிஜிட்டல் இந்தியா‘ திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக அனைத்து ரெயில் நிலையங்களிலும் இலவச ‘வை–பை‘ சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த சேவையானது ‘ரெயில்–டெல்‘ மற்றும் கூகுள் நிறுவனத்துடன் சேர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் ரெயில் பயணிகள் மிகவும் பயன் அடைவதுடன், ‘டிஜிட்டல் இந்தியா‘ திட்டம் ரெயில்வே துறையில் வெற்றி பெற வாய்ப்பாக அமையும். தென்மேற்கு ரெயில்வே சார்பில் ‘மி‌ஷன் வை–பை‘ என்ற பெயரில் ரெயில் நிலையங்களில் ‘வை–பை‘ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 18 மாதங்களில் மட்டும் கர்நாடகத்தில் 115 ரெயில் நிலையங்களில் இலவச ‘வை–பை‘ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதில், மடிகேரி தவிர்த்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு தாலுகா ரெயில் நிலையங்களிலும் ‘வை–பை‘ வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய ரெயில் நிலையங்களான பெங்களூரு, யஷ்வந்தபுரம், மைசூரு மற்றும் உப்பள்ளி ரெயில் நிலையங்களில் அதிவேக ‘வை–பை‘ வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ‘டிஜிட்டல் இந்தியாவில் ஸ்மார்ட் ரெயில்வே‘ என்ற பெயரை ரெயில்வே துறை பெற வாய்ப்புள்ளது.

வேகம்

மாநிலத்தில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் எந்த இடையூறும் இன்றி தங்கள் செல்போன் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றில் ‘வை–பை‘ வசதிக்கான 4 இலக்க கடவுச்சொல்லை பயன்படுத்தி இலவச ‘வை–பை‘ சேவையை பெற்று கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு ரெயில் நிலையங்களில் முதல் 30 நிமிடங்கள் வரை பயணிகள் தங்களின் செல்போன், மடிக்கணினி உதவியுடன் இணையதளத்தில் ஏதேனும் பதிவேற்றினால் அதற்கான வேகம் ‘1 எம்.பி.‘ என்ற அளவிலும், பதிவிறக்கம் செய்தால் அதற்கான வேகம் ‘3 எம்.பி.‘ என்ற அளவிலும் உள்ளது. பின்னர் ‘வை–பை‘ மூலம் கிடைக்கும் இணையதளத்தின் வேகம் ‘64 கே.பி.‘ என்ற அளவில் குறையும். இருப்பினும், ரெயில்வே சார்ந்த விவரங்களை இணையதளங்களில் தேடும்போது ‘வை–பை‘ சேவையின் வேகம் நன்றாக இருக்கும்.

மேற்கண்ட தகவல் தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்