பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது ரூ.1 லட்சம், கார், மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்

பாரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம், 2 கார், 12 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-06-23 22:15 GMT
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பாரூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் பாரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சந்தனூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சிலர் சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அதில் 8 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியை சேர்ந்த செம்மலை (வயது 37), அரூர் திருப்பதி (32), ஓமலூர் தாலுகா கஞ்சநாயக்கன்பட்டி செந்தில் (33), காவேரிப்பட்டணம் ரவிக்குமார் (52), காரிமங்கலம் அருகே உள்ள தும்மளஹள்ளியை சேர்ந்த சக்திவேல் (35), பர்கூர் அருகே உள்ள மஞ்சமேடு பகுதியை சேர்ந்த மணி (54), காவேரிப்பட்டணம் மாதேஸ்வரன் (55), காரிமங்கலம் ரங்கசாமி (35) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.99 ஆயிரத்து 360 மற்றும் 12 மோட்டார்சைக்கிள்கள், 2 கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தப்பி ஓடிய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்