காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் அ.தி.மு.க. அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு

காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் அ.தி.மு.க. அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது என்று, ஒரத்தநாட்டில் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

Update: 2018-06-23 22:45 GMT
ஒரத்தநாடு,

ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் ஒரத்தநாட்டில் நடந்தது. கூட்டத்துக்கு ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கோவி.தனபால் தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, பரசுராமன் எம்.பி., தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் துரை.வீரணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் அயராத முயற்சியின் பலனாக பல ஆண்டுகளாக இருந்து வந்த காவிரி உரிமை பிரச்சினையில் தமிழகத்துக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று போராடி காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்தார்.

அதன்பிறகு அவர் காட்டிய வழியில் செயல்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, சுப்ரீம் கோர்ட்டு மூலம் தொடர்ந்து போராடி காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுகுழுவும் அமைக் கப்பட்டு்ள்ளது. இதன்மூலம் பல ஆண்டுகள் நடைபெற்று வந்த காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் அ.தி.மு.க அரசு வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தி.மு.க ஆட்சியில் இருந்தபோது கருணாநிதி, தனது குடும்பத்தின் சுயநலத்துக்காக தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்தார். தற்போது அவருடைய மகன் ஸ்டாலின், ஜூன் 12-ந் தேதி ஏன் தண்ணீரை திறக்கவில்லை? என்று கேட்கிறார்.

தற்போது மேட்டூர் அணையில் குறைவாக தண்ணீர் இருப்பதால் திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனால் மு.க.ஸ்டாலின் அரசியல் லாபத்துக்காக பேசுகிறார். இவர்களை போன்றவர்களால் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:-

ஒரத்தநாடு தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி சேவையாற்றி வருகிறார். இதனால் அவர் ஒரத்தநாட்டின் அடையாளமாக திகழ்கிறார். ஜெயலலிதாவின் மறைவால் பிளவுபட்ட அ.தி.மு.கவை ஒருங்கிணைத்ததில் ஆர்.வைத்திலிங்கத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.கோவிந்தராசு எம்.எல்.ஏ., தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட மாணவரணி செயலாளர் ஆர்.காந்தி, மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், இளைஞரணி துணைச்செயலாளர் கோவிந்தராஜ், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் பழனிவேல் வாண்டையார், தலைமை கழக பேச்சாளர் விஸ்வலிங்கம், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சாமியய்யா, முன்னாள் மாவட்ட பொருளாளர் மதியழகன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முடிவில் ஒரத்தநாடு நகர செயலாளர் செல்வம் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்