நொளம்பூரில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது கலெக்டரிடம் ஏப்பாக்கம் கிராம மக்கள் மனு

நொளம்பூரில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று கலெக்டரிடம் ஏப்பாக்கம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2018-06-23 22:45 GMT

விழுப்புரம்,

திண்டிவனம் அருகே உள்ள ஏப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

எங்கள் கிராமத்தில் 4 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். நாங்கள் அத்தியாவசிய தேவைக்காக திண்டிவனம் நகருக்கு செல்ல நொளம்பூர் வழியாகத்தான் செல்ல வேண்டும். அதுபோல் மாணவ– மாணவிகளும் இந்த வழியாகத்தான் பள்ளி– கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

இப்படியிருக்க நொளம்பூர் கிராம மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டில் டாஸ்மாக் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் கடைக்கு மது குடிக்க வருபவர்களால் தினம், தினம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே நொளம்பூரில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது. அதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்