இலங்கைக்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-06-23 22:15 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்தி செல்வதற்காக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் உத்தரவின் பேரில் வேதாரண்யம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலுமேற்பார்வையில் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் மும்தாஜ் பேகம், வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு மற்றும் போலீசார் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடற்கரை பகுதியில் ஒரு கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

3 பேர் கைது

இதுதொடர்பாக ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த வெற்றிவேல் (வயது41), ராஜேந்திரன் (56), ராமையன் (71) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கஞ்சாவை இலங்கைக்கு படகு மூலம் கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்