இளங்கலை பட்டப்படிப்பு இறுதி தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு பதிவாளர் சந்தோஷ் பாபு தகவல்
நெல்லை மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழக இளங்கலை பட்டப்படிப்பு இறுதி தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது.
நெல்லை,
நெல்லை மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழக இளங்கலை பட்டப்படிப்பு இறுதி தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது என்று பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிறப்பு துணை தேர்வு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் கடந்த 2015-16ம் கல்வி ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்புக்காக சேர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு எழுதிய மாணவர்களுடைய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த மாணவர்கள் தங்களது படிப்பு காலத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாமல் இருந்திருந்தால் அவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி வருகிற 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்கள், பகுதி-5 பொது அறிவு பாடங்களுக்கும், 6-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு பி.காம். பாடப்பிரிவுகளுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது.
7-ந் தேதி காலை பி.ஏ., பி.பி.ஏ. பாடங்களுக்கான தேர்வுகளும், பிற்பகல் 2 மணிக்கு பி.எஸ்சி., பி.சி.ஏ. பாடங்களுக்கான தேர்வுகளும் நடத்தப்படுகிறது. 2015-ம் ஆண்டுக்கு முன்பு சேர்ந்து படித்தவர்கள் இந்த தேர்வை எழுத முடியாது.
விண்ணப்பம்
இளங்கலை மாணவர்கள் வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந் தேதிக்குள் www.msun-iv.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்குரிய தேர்வு கட்டணம் ரூ.1,000-த்தை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.
அதன் பிறகு அனுமதி சீட்டை பல்கலைக்கழக இணையதளம் மூலம் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படும். இந்த தேர்வு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.