வீரபாண்டியில் முல்லைப்பெரியாறு தடுப்பணையில் குளிக்க தடை
வீரபாண்டியில் முல்லைப்பெரியாறு தடுப்பணையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உப்புக்கோட்டை,
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில், கன்னீஸ்வரமுடையார் கோவில் உள்ளன. இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் கவுமாரியம்மன் கோவிலில் நடைபெறும் விளக்கு பூஜையில், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இங்கு வருகிற பக்தர்கள், கவுமாரியம்மன் கோவில் அருகே உள்ள முல்லைப்பெரியாறு தடுப்பணையில் குளித்து விட்டு சாமி தரிசனம் செய்வர். இதேபோல் திண்டுக்கல்–குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வீரபாண்டி உள்ளது. இந்த சாலை வழியாக குமுளி, தேக்கடி, சபரிமலை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் சென்று வருகின்றனர். இவர்களும் தடுப்பணையில் குளித்து செல்வர்.
இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடு, கிடு வென உயர்ந்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து வீரபாண்டியில் உள்ள முல்லைப்பெரியாறு தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் எதிரொலியாக, பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பணையில் குளிப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் அங்கு, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில் குமார் உத்தரவுப்படி 4 பணியாளர்கள் தடுப்பணை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள், படித்துறை பகுதிகளில் பாதுகாப்பான முறையில் சுற்றுலா பயணிகள், பக்தர்களை குளிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.