மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 45 பேர் கைது

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-23 22:45 GMT
புதுக்கோட்டை,

தி.மு.க.வினரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நேற்று கவர்னர் மாளிகையை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கு பெரியண்ணன் அரசு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் நைனாமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கவர்னரை கண்டித்தும், உடனடியாக மு.க.ஸ்டாலினை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், பரவாசுதேவன் மற்றும் போலீசார் பெரியண்ணன்அரசு எம்.எல்.ஏ. உள்பட 20 பேரை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல திருவரங்குளம் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆலங்குடியில் உள்ள சந்தைப்பேட்டையில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று, வடகாடு முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி ராமச்சந்திரன், முன்னாள் நகர செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆலங்குடி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 25 பேரை கைது செய்து, அதே பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல அறந்தாங்கி பஸ் நிலையம் முன்பு தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உதயம்சண்முகம் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அறந்தாங்கி நகரசெயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் நகர செயலாளர் ராஜேந்திரன், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்கணேசன், பொதுக்குழு உறுப்பினர் புருசோத்தமன், மகளிர் அணி பாத்திமா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்