திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆனி வருசாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-06-23 21:00 GMT

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆனி வருசாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆனி வருசாபிஷேகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆனி வருசாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை கும்பங்களுக்கும், குமரவிடங்கப்பெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதி முன்பு பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் காலை 8.15 மணிக்கு பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமானதளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு காலை 8.40 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமானத்திற்கு புனிதநீரால் வருசாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை விமானத்திற்கும் வருசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

திரளான பக்தர்கள்

விழாவில், கோவில் இணை ஆணையர் பாரதி, ஓய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர்கள் வெள்ளத்துரை, மகாமுனி, சொர்ணம், மணியம் ரமேஷ், உள்துறை பணியாளர்கள் மோகன்ராஜ், கோமதிசங்கர், வள்ளிநாயகம், சிவசுப்பிரமணியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்