அனுமதியற்ற மனைகளை விரைந்து வரன்முறைப்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்தும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-06-23 20:30 GMT

தூத்துக்குடி, 

அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்தும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு துறையில் அனுமதி பெறாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பான கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர்கள், பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:–

வரன்முறை

இனிவரும் காலங்களில் வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய நகர் ஊரமைப்பு துறையின் அனுமதி அல்லது மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தப்பட்ட வரைபடம் இருந்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய முடியும். மேலும், அவ்வாறு அனுமதி பெறாத மனைப்பிரிவுகளுக்கு கட்டிட அனுமதி வேண்டி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 20.10.2016–க்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவில் மனைகளை வாங்கியவர்கள் அதனை உரிய கட்டணம் செலுத்தி வரன்முறை செய்துகொள்ள வேண்டும்.

அதனை வரன்முறைப்படுத்த www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மனை ஒன்றுக்கு ரூ.500 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். வரன்முறை கட்டணம் மற்றும் அபிவிருத்தி கட்டணம் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகளில் செலுத்தி மனை உத்தரவு பெற்றுக்கொள்ள கடைசி நாள் 3.11.2018 என அரசு அறிவித்துள்ளது.

விழிப்புணர்வு

வரன்முறை செய்யப்படாத மனைகளுக்கு அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின்சாரம், கழிவுநீர் அகற்றும் வசதி போன்றவை கிடைக்காது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் அனுமதியற்ற மனை–மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். மேலும் இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்