மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்பட 62 பேர் கைது

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-23 21:45 GMT

தூத்துக்குடி, 

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்பட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் 4 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் முன்பு கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட 52 பேரை கைது செய்தனர்.

எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு நகர செயலாளர் பாரதி கணேசன் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி செயலாளர் லெனின், விவசாய அணி அமைப்பாளர் கோமதி சங்கர், மயில்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 10 பேரை எட்டயபுரம் போலீசார் கைது செய்து, அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட பிரதிநிதி முத்து, நகர மாணவர் அணி துணை செயலாளர் மயில்கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் அங்கு சென்று, சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் புதூரிலும் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 இடங்களில் நடந்த சாலை மறியலில் போராட்டத்தில் எம்.எல்.ஏ. உள்பட மொத்தம் 62 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்