மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல்

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-23 22:30 GMT

ராமநாதபுரம்,

சென்னையில் ஆளுனர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் திவாகரன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, நகர் செயலாளர் கார்மேகம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ராமநாதபுரம் அரண்மனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தூவல் முத்துராமலிங்கம் தலைமையில் 45–க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர். ஆர்.எஸ்.மங்கலத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் தன.மதிவாணன் தலைமையில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கற்பகம் ரவிச்சந்திரன் உள்பட 14 பேர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதேபோல ஆர்.எஸ்.மங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் புரோஸ்கான் தலைமையில் மாவட்ட அவை தலைவர் தீனதயாளன் உள்பட 18 பேர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

திருவாடானை தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் திருவாடானை–ஓரியூர் நான்குமுனை சந்திப்பில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அதனைதொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 35 பேரை திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேசுவரி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்