மழை பெய்யாததால் கடும் வறட்சி சுந்தனேந்தல் வனப்பகுதியில் இருந்து இடம்பெயரும் மான்கள்

மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுவதால் சுந்தனேந்தல் வனப்பகுதியில் இருந்து மான்கள் இடம்பெயர்ந்து வருகின்றன.

Update: 2018-06-23 22:15 GMT

பரமக்குடி,

பரமக்குடி–பார்த்திபனூர் இடையே அமைந்துள்ளது சுந்தனேந்தல் கிராமம். இங்கு தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் வனப்பகுதி உள்ளது. மரங்கள், செடிகள் அடர்ந்து வளர்ந்து பச்சைப்பசேல் என இருக்கும். இதனால் அங்கு ஏராளமான மான்கள், வெள்ளை மயில் மற்றும் வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும்.

சில நேரங்களில் தண்ணீர் குடிப்பதற்காகவும், இரை தேடியும் அருகில் உள்ள தோப்புகளுக்கும், கிராமத்தில் உள்ள குடியிருப்புகளுக்கும் அவைகள் சுதந்திரமாக வந்து செல்லும். அப்பகுதி மக்களும் அவற்றை துன்புறுத்தாமல் உணவு தானியங்களை வழங்குவார்கள். சில நேரங்களில் தனியாக வரும் மான்களை வெறிநாய்கள் கடித்து விடுவது அவ்வப்போது நடைபெறும்.

பரமக்குடி பகுதியில் மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மக்கள் தேவைக்கு ஏற்ப குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலையில் மான்களுக்கும், மயில்களுக்கும் எப்படி தண்ணீர் கொடுப்பது என்ற நிலைக்கு மக்களும் ஆளாகி விட்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் செண்டா மேளங்கள் கொட்டியும், சப்தங்கள் எழுப்பியும், தீ மூட்டியும் சுந்தனேந்தல் வனப்பகுதியில் இருந்த மான்களையும், மயில்களையும் விரட்டி வருகின்றனர்.

இதனால் அவை தற்போது வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. வனத்துறை சார்பில் சுந்தனேந்தல் பகுதியில் தண்ணீர் உள்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்