தமிழகத்தில் 4 ஆயிரம் நர்சுகள், 1,500 டாக்டர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் அமைச்சர் தகவல்

தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரம் நர்சுகள் மற்றும் 1,500 டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2018-06-23 23:15 GMT
திருச்சி,

தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள காலிப்பணியிடங்களில் புதிதாக 4 ஆயிரம் ஸ்டாப் நர்சு பணியிடங்களை இன்னும் 2 மாதத்தில் நிரப்ப இருக்கிறோம். அடுத்து 1,500 எம்.பி.பி.எஸ். டாக்டர்களை நியமிக்க இருக்கிறோம். அத்துடன் ஸ்பெஷாலிட்டி டாக்டர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

ரூ.1,685 கோடி நிதியில் சர்வதேச தரத்தில் 17 ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த இருக்கிறோம். மேலும் உலக வங்கி நிதி உதவி திட்டத்தில் ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த ரூ.2,685 கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 89,903 நோயாளிகளுக்கு ரூ.168 கோடி மருத்துவ சேவைக்காக செலவிடப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 44 சி.டி.ஸ்கேன், 18 எம்.ஆர்.ஐ., 11 கேத்லாப், 15 கோபால்ட், 9 மீனாக்யர், 900 சிமென்ஸ் செல்கவுன்ட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அரசு ஆஸ்பத்திரிகளுக்காக வாங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை, மாவட்ட நிர்வாகம் கேட்பதை முன்னுரிமை அடிப்படையில் செய்து கொடுக்க தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில்,“திருச்சி மாவட்டத்தில் மிக முக்கியமாக ரூ.18 கோடி மதிப்பில் ‘லீனாக் ஆக்சிலேட்டர்’, சி.டி.ஸ்டுபிலேட்டர் மற்றும் பிரேக்ய தெரபி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவை 3-ம் புற்றுநோயை கண்டறிவதோடு மட்டுமல்லாது அவற்றை குணப்படுத்தக்கூடிய அதிநவீன கருவிகள். இதனை ஏர்போர்ட் அதாரிட்டி வழங்கி இருக்கிறது. இதுதவிர மற்ற உபகரணங்கள், கட்டிடம் என அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.24 கோடி திருச்சி அரசு மருத்துவமனைக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கரிடம், தமிழகத்தில் நடந்த குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது குறித்து கேட்டபோது, அதற்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார். 

மேலும் செய்திகள்