விடுமுறை எடுத்ததை கண்டித்ததால் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கண்டக்டர் தீக்குளிக்க முயற்சி

விடுமுறை எடுத்ததை கண்டித்ததால் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பஸ் கண்டக்டர் தீக்குளிக்க முயன்றார்.

Update: 2018-06-23 23:15 GMT
திருச்சி,

திருச்சி குழுமணியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 54). இவர் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக புறநகர் கிளை பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் தொ.மு.ச. கிளை துணை செயலாளராகவும் உள்ளார். நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி பணிமனை வளாகத்துக்கு வந்த சிறிது நேரத்தில் தான் பாட்டிலில் கொண்டு வந்து இருந்த பெட்ரோலை திடீரென தனது உடலில் ஊற்றி கொண்டு ‘தீ‘ வைக்க முயன்றார். இதனை கண்டு அருகே இருந்த ஊழியர்கள் பதறிப்போய் தீயை பற்ற வைக்க விடாமல் தடுத்து அவரை காப்பாற்றினர். பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர்.

இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

“நான் இதய நோயாளி என்பதால் 3 மாதத்துககு ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மாத்திரை சாப்பிடுகிறேன். இந்த மாதம் நான் 4 நாட்கள் விடுமுறை எடுத்து இருந்தேன். ஆனால் 2 நாளுக்கு ஆப்சென்ட் போட்டு சம்பளத்தில் பிடித்தம் செய்து விட்டனர். மேலும், எனக்கு மெமோவும் கொடுத்துள்ளனர். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இரவு முழுவதும் தூக்கமே இல்லாமல் தவித்தேன். இது குறித்து காலை பணிக்கு வந்ததும் பணிமனை மேலாளரிடம் கேட்டேன். அவர் முறையாக பதில் அளிக்கவில்லை.

இதனால் தற்கொலை செய்து கொள்ள முடி வெடுத்து தீக்குளிக்க முயன்றேன். அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை உள்ளது. ஆனால் அந்த விடுமுறையை எடுத்து கொள்ள அனுமதிப் பதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ணமூர்த்தி தீக்குளிக்க முயன்றது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இது குறித்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் பணிமனை மேலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடன்பாடு ஏற்பட்டது. திருச்சியில் போக்குவரத்துக்கழக பணிமனையில் கண்டக்டர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்