8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி தீக்குளிக்க முயற்சி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-22 23:29 GMT
பொம்மிடி,

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இதையடுத்து தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களில் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வருவாய்த்துறையினர், நில அளவையாளர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலமேலுபுரம் பகுதியில் வருவாய்த்துறையினர் அளவீடு செய்வதற்கு போலீசாருடன் சென்றனர்.

அப்போது காளிப்பேட்டையை சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி ஜெயாவுக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தை அளவீடு செய்ய வருவாய்த்துறையினர் முயன்றனர். இதற்கு ஜெயா மற்றும் அவருடைய மகன் மணிவண்ணன், மாமியார் மலட்சியம்மாள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஜெயா தனது நிலத்தை அளவீடு செய்தால் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிப்பேன் என்று கையில் வைத்திருந்த கேனை காட்டி மிரட்டல் விடுத்தார்.

இதேபோல் அதேபகுதியை சேர்ந்த கிருஷ்ணன், சுகுமார், விமலா ஆகியோரும் அவர்களுடைய நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் உடலில் கருப்பு பேட்ஜ் அணிந்தும், நிலத்தில் கருப்பு கொடி கட்டியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் வருவாய்த்துறை அலுவலர்கள் நிலத்தை அளவீடு செய்யாமல் சென்று விட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே பசுமை வழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற இருளப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சந்திரகுமார், வேலவன், மனோகரன் ஆகியோரை அழைத்து வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் சமாதானம் அடைந்ததால் வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் அவர்களின் நிலங்களில் அளவீடு செய்தனர்.

மேலும் செய்திகள்