நபார்டு திட்டத்தின் கீழ் 3 கிராமங்களில் புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்

நபார்டு திட்டத்தின் கீழ் 3 கிராமங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தக கட்டிடங்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.;

Update: 2018-06-22 23:16 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் சின்னவத்தலாபுரம், செம்மாண்டகுப்பம், ஒடசல்பட்டி ஆகிய 3 கிராமங்களில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் ரூ.69 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதிய கால்நடை மருந்தகங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜமனோகரன் வரவேற்று பேசினார். துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் டி.ஆர்.அன்பழகன், நகராட்சி முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய கால்நடை மருந்தக கட்டிடங்களை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 20 கிளை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 12 கால்நடை மருந்தகங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு கிராமப்புறங்களில் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளியோருக்கு விலையில்லா கறவைபசுக்கள், செம்மறிஆடுகள் வழங்கும்திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தினார். இந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 23 ஊராட்சிகளில் 1150 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் 1150 கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோன்று செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 7 ஆண்டுகளில் 27ஆயிரத்து 190 பயனாளிகளுக்கு ரூ.35 கோடி மதிப்பில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 760 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின்கீழ் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.3 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 975 பயனாளிகள் நாட்டுக்கோழி பண்ணைகள் அமைத்து பயனடைந்து உள்ளனர். புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 1940 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கோழிக்குஞ்சு கூண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

விழாவில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தியாகராஜன், பேரூராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியக்குழுமுன்னாள் தலைவர் மகேந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வேலுமணி, கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கந்தசாமி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை இயக்குனர் வேடியப்பன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்