மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக மல்லிகார்ஜூன கார்கே நியமனம்

மராட்டிய மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக மல்லிகார்ஜூன கார்கேயை நியமித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டார்.

Update: 2018-06-22 22:30 GMT
மும்பை, 

மராட்டிய மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக மல்லிகார்ஜூன கார்கேயை நியமித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டார்.

காங்கிரஸ் பொறுப்பாளர்

மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக மோகன் பிரகாஷ் இருந்து வந்தார். இந்தநிலையில் மோகன் பிரகாசுக்கு பதிலாக மல்லிகார்ஜூன கார்க்கேயை மராட்டிய மாநில மேலிட பொறுப்பாளராக நியமித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டு உள்ளார்.

இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். தொழிலாளர் நலன், ரெயில்வே ஆகிய துறைகளில் மத்திய மந்திரியாக பணியாற்றிவர். தற்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குழு தலைவராக பணியாற்றி வருகிறார்.

இதுதவிர குஜராத்தை சேர்ந்த சோனல் பட்டேல், ஹரியானவை சேர்ந்த ஆஷிஷ் துவா மற்றும் தெலுங்கானவை சேர்ந்த சம்பத் குமார் ஆகியோர் மராட்டிய மாநிலத்துக்கான காங்கிரஸ் தேசிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அசோக் சவான் வரவேற்பு

இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மேலிட பொறுப்பாளர் மோகன் பிரகாஷ், ‘இதுவரை மராட்டியத்தில் பணியாற்றும் வாய்ப்பை வழங்கிய சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் எனக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கிய மராட்டிய மக்கள் மற்றும் காங்கிரஸ் மாநில குழுவினருக்கும் நன்றி செலுத்துகிறேன்’ என கூறினார்.

இதற்கிடையே மல்லிகார்ஜூன கார்கேவின் நியமனத்தை வரவேற்ற மராட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், ‘மல்லிகார்ஜூன கார்கே அனுபவமிக்க மூத்த தலைவர். அவரது அனுபவம் மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும்’ என தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றபின் கட்சியின் மாநில பொறுப்பில் நடைபெறும் பெரிய மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டே இந்த நியமனம் நடைபெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்