மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை இன்று முதல் அமல் மீறினால் அபராதத்துடன் 3 மாதம் ஜெயில்
மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. மீறினால் அபராதத்துடன் 3 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்படவுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. மீறினால் அபராதத்துடன் 3 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்படவுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைமராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு என அனைத்து விதமான புழக்கத்துக்கும் தடை விதித்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் 23–ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட தட்டுகள், டம்ளர்கள், பைகள், தண்ணீர் பாட்டில்கள், தெர்மாக்கோல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டன.
இதனை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை சுட்டிக்காட்டி அரசின் முடிவுக்கு தடை விதிக்க மறுத்தது.
3 மாதம் அவகாசம்இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தவும், மறுசுழற்சி மையங்களில் ஒப்படைக்கவும் 3 மாதம் அவகாசம் அளித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வருகிறது. இதனால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இனி உற்பத்தி செய்யவோ, விற்கவோ, பயன்படுத்தவோ முடியாது.
பிளாஸ்டிக் பொருட்கள் தடையை மீறுபவர்களுக்கு முதல்முறை ரூ.5 ஆயிரமும், இரண்டாம் முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மேலும் ஒருவர் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களோடு பிடிபட்டால் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதேவேளையில் எலக்ட்ரானிக் பொருட்கள், ஷாம்பூ மற்றும் எண்ணெய் பாக்கெட்டுகள் உள்பட குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மந்திரி எச்சரிக்கைஇந்தநிலையில் பிளாஸ்டிக் தடையை திறம்பட அமல்படுத்துவது குறித்து நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பின்னர் நிருபர்களை சந்தித்த மராட்டிய சுற்றுச்சூழல் மந்திரி ராம்தாஸ் கதம்(சிவசேனா) கூறியதாவது:–
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது குறித்து பொதுமக்களிடையே அடுத்து வரும் 8 நாட்களுக்கு தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். பிளாஸ்டிக் தடை காரணமாக பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு தொல்லை கொடுக்கப்படாது. அதேநேரத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் யாராவது தடையை மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
80 சதவீத பிளாஸ்டிக் பொருட்கள் குஜராத்தில் இருந்துதான் மராட்டியத்துக்குள் கடத்தி வரப்படுகின்றன. இந்த தடை உத்தரவால் குஜராத்தில் தான் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் பறிபோக வேண்டி வரும். யாராவது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுடன் பிடிபட்டால் 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கு விசாரணை தள்ளிவைப்புஇதற்கிடையே மும்பை ஐகோர்ட்டில் பிளாஸ்டிக் தடை உத்தரவுக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற மாநிலம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அறிவியல் பூர்வமான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருப்பதாக அரசு வக்கீல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(ஜூலை) 20–ந் தேதிக்கு தள்ளி வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.