ஈரோடு வழியாக திருப்பூருக்கு ஓடும் ரெயிலில் 64 கிலோ கஞ்சா கடத்தல்; 3 பெண்கள் கைது

ஈரோடு வழியாக திருப்பூருக்கு ஓடும் ரெயிலில் 64 கிலோ கஞ்சா கடத்திய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-22 23:15 GMT
ஈரோடு, 

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, மதுசூதனரெட்டி மற்றும் போலீசார் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேலம் ரெயில் நிலையம் வந்தபோது ரெயிலில் ஏறினார்கள். அவர்கள் ஒவ்வொரு பெட்டியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பொதுப்பெட்டியில் 3 பெண்கள் சந்தேகத்திற்கு இடமாக 9 பைகள் வைத்திருந்ததை போலீசார் கவனித்தனர். உடனே போலீசார் அந்த பெண்களிடம் இருந்த பைகளை வாங்கி திறந்து பார்த்தனர். அப்போது பைக்குள் ஏராளமான பண்டல்கள் இருந்தன. அந்த பண்டல்களை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

இதற்கிடையே தன்பாத் ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்தது. அதனால் போலீசார் அந்த 3 பெண்களையும் ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மாயம்குரும்பட்டி பகுதியை சேர்ந்த பாப்பா (வயது 40), ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள வின்னுகோபால் பட்டணம் பகுதியை சேர்ந்த கொலுசுலட்சுமி (45), விசாகப்பட்டினத்தை அடுத்த தாஜ்ஜில் பகுதியை சேர்ந்த பானுமதி (35) என தெரிய வந்தது.

மேலும் இவர்கள் 3 பேரும் விசாகப்பட்டினத்தில் இருந்து திருப்பூருக்கு ரெயில் மூலம் 64 கிலோ கஞ்சாவை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ஈரோடு ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாப்பா, கொலுசுலட்சுமி, பானுமதி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 64 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்