ஈரோடு மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2018-06-22 23:00 GMT
ஈரோடு,
 
ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வாகனங்களை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்த அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டு உள்ளார்.

வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக ஏற்கனவே கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த இடங்களில் பழுதான கேமராக்கள், இணைப்பு ஒயர்களை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் மட்டுமின்றி 4 வழிச்சாலை பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. பெருந்துறை-காஞ்சிக்கோவில் ரோடு 4 வழிச்சாலை சந்திப்பு பகுதியில் 2 பக்கமும் தலா 4 கேமராக்கள் வீதம் 8 கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டு உள்ளன.

இரவு நேரத்திலும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் உயர் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அருகிலேயே கட்டுப்பாட்டு அறையும் உள்ளது.

இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “ஈரோடு மாவட்டத்தில் கூடுதலாக சோதனைச்சாவடி மற்றும் சோதனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராவானது அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்யும் வகையில் இருக்கும். இதன் மூலம் கேமரா பொருத்தப்பட்டு இருக்கும் பகுதியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களும், நபர்களும் பதிவு செய்யப்படுவார்கள்” என்றார்கள்.

மேலும் செய்திகள்