பெங்களூருவில் 6 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் சேவை குமாரசாமி தொடங்கி வைத்தார்
பெங்களூருவில் 6 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் சேவையை முதல்–மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,
பெங்களூருவில் 6 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் சேவையை முதல்–மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.
6 பெட்டிகளுடன் மெட்ரோ ரெயில்பெங்களூருவில் 42 கிலோ மீட்டர் நீளத்திற்கு பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரையிலும், நாகச்சந்திராவில் இருந்து எலச்சனஹள்ளி வரையிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 3 பெட்டிகளுடன் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
ரெயில்களில் ஒருவரோடு ஒருவர் ஒட்டி நிற்கும் நிலை உள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள் பெரிதும் தொந்தரவை அனுபவித்து வருகிறார்கள். இந்த கூட்ட நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயிலில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 6 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா பையப்பனஹள்ளி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
1,900 பேர் பயணிக்கலாம்இதில் முதல்–மந்திரி குமாரசாமி, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி ஹர்தீப்சிங் புரி ஆகியோர் கலந்துகொண்டு கொடி அசைத்து 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர். இதில் துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒரு ரெயில் மட்டும் 6 பெட்டிகளுடன் இன்று(சனிக்கிழமை) முதல் இயங்க உள்ளது.
3 பெட்டிகளில் 900 பேர் பயணிக்க முடியும். இந்த 6 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயிலில் 1,900 பேர் பயணிக்கலாம். பயணிகளின் நெரிசலை கட்டுப்படுத்த அந்த ரெயில் காலை மற்றும் மாலை நேரங்கள் மட்டும் இயக்கப்படும் என்று தெரிகிறது. அதாவது காலையில் 3 தடவையும், மாலையில் 3 தடவையும் அந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.
ஒரு பெட்டி பெண்களுக்காக...இந்த 6 பெட்டி மெட்ரோ ரெயிலில் முதல் ஒரு பெட்டி முழுவதும் பெண்களுக்காக ஒதுக்கப்படுகிறது. அந்த பெட்டிக்குள் ஆண்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் தற்போது 3 பெட்டிகளுடன் ஓடும் ரெயிலில் முதல் பெட்டியில் 2 நுழைவு வாயில்களில் மட்டும் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
6 பெட்டி ரெயில் காலை மற்றும் மாலை நேரங்களில் இயங்குவதை தவிர மற்ற நேரங்களில் ரெயில் பணிமனையில் நிறுத்தப்படும். அந்த ரெயிலில் இருந்து பெட்டிகளை கழற்றி வேறு ரெயிலுடன் இணைக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மெட்ரோ ரெயில் பெட்டிகளை தயாரித்து வழங்கும் பணியை பி.எச்.இ.எல். நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நெரிசல் குறையும்வருகிற செப்டம்பர் மாதத்திற்கு பிறகு அந்த நிறுவனம் 9 பெட்டிகளை தயாரித்து மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளது. அக்டோபர் மாதத்திற்கு பிறகு 12 பெட்டிகளை அந்த நிறுவனம் தயாரித்து வழங்கும். இந்த ஆண்டின் இறுதிக்குள் 6 பெட்டிகளுடன் ஓடும் மெட்ரோ ரெயில்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். 6 பெட்டிகளுடன் அனைத்து ரெயில்களும் இயங்கினால், பயணிகள் நெரிசல் முழுமையாக குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.