மர்மநபர்கள் திருடிச் சென்றனர் பசுமாட்டை பறிகொடுத்த ஏழை தம்பதிக்கு நடிகர் ஜக்கேஷ் நிதி உதவி

பெங்களூருவில் ஏழை தம்பதியின் பசுமாட்டை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதையடுத்து பசுவை பறிகொடுத்த ஏழை தம்பதிக்கு நடிகர் ஜக்கேஷ் நிதி உதவி வழங்கினார்.

Update: 2018-06-22 21:30 GMT

பெங்களூரு, 

பெங்களூருவில் ஏழை தம்பதியின் பசுமாட்டை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதையடுத்து பசுவை பறிகொடுத்த ஏழை தம்பதிக்கு நடிகர் ஜக்கேஷ் நிதி உதவி வழங்கினார்.

பசு மாடு திருட்டு

பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் நிலைய எல்லைக்குள் விஞ்ஞானநகர் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. அவருடைய மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஒரு பசு மாட்டை வளர்த்து வந்தனர். ஏழை தம்பதியான ஏழுமலை–லட்சுமி தம்பதிக்கு அந்த பசு மாடு நிதி ஆதாரமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 13–ந் தேதி அந்த பசு மாடு திருடுப்போனது. யாரோ மர்மநபர்கள் அந்த பசுமாட்டை வாகனத்தில் ஏற்றி சென்றுவிட்டனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்தில் அந்த தம்பதியினர் புகார் கொடுத்தனர். அதை ஏற்க போலீசார் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதையடுத்து போலீசார் அந்த தம்பதியிடம் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்கள் பசுமாட்டை திருடிச் செல்லும் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதனை ஆய்வு செய்த போலீசார், மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நடிகர் ஜக்கேஷ் உதவி

இதுகுறித்த செய்தியை கவனித்த நடிகரும், பா.ஜனதா பிரமுகருமான ஜக்கேஷ், ஏழுமலை–லட்சுமி தம்பதியை தனது வீட்டுக்கு அழைத்து ஆறுதல் கூறினார். பசு மாடு இல்லாததால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இதையடுத்து ஜக்கேஷ் ரூ.25 ஆயிரத்தை அவர்களுக்கு கொடுத்தார். அந்த பணத்தை கொண்டு ஒரு பசு மாட்டை வாங்கி அதை குடும்ப நிதி ஆதாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார். அவருக்கு ஏழுமலை–லட்சுமி தம்பதி கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்