குடிமங்கலம் பகுதியில் பண்ணைக்குட்டைகள் அமைக்க அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

குடிமங்கலம் பகுதியில் பண்ணைக்குட்டைகள் அமைக்க அரசு நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-06-22 22:30 GMT
குடிமங்கலம்,

குடிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குடிமங்கலம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 300 அடியாக இருந்தது. ஆனால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதனால் தென்னை விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் விவசாயத்தில் முக்கிய பிரச்சினையாக இருப்பது நீர். இதனால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், பருவமழை குறைவை சமாளிக்கவும் விவசாயிகள் தாங்களாகவே முன் வந்து விளைநிலங்களுக்கு நடுவே பண்ணை குட்டைகள் அமைத்து தென்னை விவசாயம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

பண்ணைக்குட்டை அமைப்பதால் வறட்சியால் பாதிக்கப்பட்ட மரங்களை காப்பாற்ற முடியும். மேலும் மழைநீர் வீணாகாது சேமிக்கப்படும். விவசாய பரப்பு அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாக பண்ணை குட்டைகள் அமைத்து விவசாயம் செய்து வருகிறோம். பண்ணை குட்டைகள் அமைப்பதற்கு அதன் அளவைப்பொறுத்து ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செலவாகிறது.

வசதிகள் குறைந்த விவசாயிகள் 5 அடி ஆழம், 20 அடி அகலம், 20 அடிநீளத்தில் பண்ணைக்குட்டைகள் அமைத்துக்கொள்வார்கள். வசதியுள்ளவர்கள் பெரிய அளவில் பண்ணைக்குட்டைகள் அமைத்துக்கொள்வார்கள். மேலும் 4, 5 விவசாயிகள் சேர்ந்தும் பெரிய பண்ணைக்குட்டைகளை அமைத்துக்கொள்வார்கள். மழைநீரை சேகரித்தும், ஆழ்குழாய் மூலம் தண்ணீரை பண்ணைக்குட்டைகளில் சேமித்தும் தென்னை மரங்களுக்கு பாய்ச்சுவார்கள்.

அதிக அளவில் பண்ணைக்குட்டைகள் அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. அரசு சார்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் குடிமங்கலம் ஒன்றியத்தில் 2 இடங்களில் மட்டுமே பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் திட்டம் முழுவெற்றி பெறாமல் உள்ளது. அனைத்து விவசாய நிலங்களிலும் அரசு சார்பில் பண்ணைக்குட்டை அமைக்க நடவடிக்கை எடுத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

அதற்கு செலவாகும் தொகையை அரசு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அதிகளவில் பண்ணைக்குட்டைகள் அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பும் உள்ளது. விவசாய சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

எனவே அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பண்ணைக்குட்டை அமைப்பதில் அரசு நிதி உதவி அளிக்க முன் வர வேண்டும். விவசாயிகளுக்கு சொட்டுநீர் அமைப்பதற்கு அரசின் சார்பில் மானியம் வழங்குவதுபோல் பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கும் மானியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்