கணவர் இறந்த 6 மாதத்தில் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சியில் கணவர் இறந்த 6 மாதத்தில் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.;

Update: 2018-06-22 21:45 GMT
திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கங்கைநகரை சேர்ந்தவர் திரவியம். இவருடைய மனைவி ஜூலி என்ற ஜெயசெல்வி(வயது 41). இவர் நாகமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு திரவியம் மரணம் அடைந்தார். இதனால் ஜூலி மிகுந்த மனவேதனையில் இருந்தார்.

மேலும் ரத்த புற்றுநோய் அறிகுறியுடன் ஜூலி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜூலிக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த ஜூலி, வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிவிட்டு மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் நீண்டநேரமாக வீட்டு கதவு திறக்கப்படாததால் அக்கம், பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் கதவை தட்டியும் திறக்கப்படவில்லை.இதையடுத்து வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது அங்கு ஜூலி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி மற்றும் போலீசார் விரைந்து வந்து ஜூலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்