ஆரணியில் 89 நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு: ஆணையாளர் அதிரடி நடவடிக்கை
ஆரணியில் வாடகை செலுத்தாத 89 நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆரணி,
ஆரணி நகராட்சியில் 492 வாடகை கடைகள் உள்ளன. கடைகளுக்கு வாடகை பன்மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் 287 நகராட்சி கடைக்காரர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்களுடைய வாடகை நிலுவை பாக்கி ரூ.3 கோடி உள்ளது.
மேலும் 118 கடைகள் கோர்ட்டுக்கு செல்லாமல் உயர்த்தப்பட்ட வாடகையும் செலுத்தாமல் உள்ளனர். இவர்களுடைய வாடகை நிலுவைத் தொகை ரூ.82 லட்சம் ஆகும்.
இதனால் நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு போதிய நிதி இல்லாத காரணத்தாலும், நகரில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கு தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்து கொள்வதில் கூட போதிய நிதி ஆதாரம் இல்லாததாலும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயகுமார் வாடகை செலுத்தாத கடைகளை சீல் வைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஸ்டான்லிபாபு தலைமையில் பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் தேவநாதன், நகர வரைபடவாளர் பாலாஜி உள்பட அலுவலர்கள் அதிரடியாக வரிவசூல் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது புதிய பஸ்நிலையம் அருகே பழ வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட வணிக வளாகத்தில் உள்ள 69 கடைகளும் டெபாசிட் செலுத்தியதுடன் ஒரு சிலர் மட்டுமே கடைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒட்டு மொத்தமாக ரூ.19 லட்சம் வாடகை நிலுவை இருப்பதால் வணிக வளாகத்தையே ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 20 நகராட்சி கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.