‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படம் தொடர்பான வழக்கு: போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் ஆபாச வசனங்கள் தொடர்பான வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-06-22 22:45 GMT
சிப்காட்( ராணிப்பேட்டை), 

ராணிப்பேட்டையை சேர்ந்தவர் வக்கீல் ஜெ.ஜானகிராமன், இவர் பா.ம.க.வில் மாநில சமூக நீதி பேரவை துணை செயலாளராக உள்ளார். கடந்த மே மாதம் 11-ந் தேதி ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் வழக்கு ஒன்றை இவர் தொடர்ந்திருந்தார்.

அதில், ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்ற படத்தில் ஆபாசமான மற்றும் கொச்சையான, இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளது. தமிழ்பண்பாடு, கலாசாரம், இவற்றிற்கு எதிராகவும், பெண்களை கீழ்த்தரமாகவும், கேவலமாகவும், கொச்சைப்படுத்தும் விதத்தில் ஆபாச வசனங்கள் எழுதியும், இளைஞர்கள், மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ திரைப்படத்தை இயக்கிய டைரக்டர் சந்தோஷ் பி.ஜெயகுமார், தயாரிப்பாளர்கள் கே.இ.ஞானவேல்ராஜா, சண்முகசுந்தரம், தங்கராஜ் ஆகியோரை வரவழைத்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை கடந்த மாதம் 15-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெ.ஸ்டெல்லி விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவில் கூறப்பட்டுள்ள புகாரில் அடிப்படை முகாந்திரம் இருப்பதால், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 202-ன்படி ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி கோர்ட்டில் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ஸ்டெல்லி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்