மானாமதுரை அருகே நூற்றாண்டை கடந்த ஊருணியை தூர்வார களம் இறங்கிய கிராம மக்கள்

மானாமதுரை அருகே நூற்றாண்டை கடந்த ஊருணியை தூர்வாரப்படாததால் கிராம மக்களே ஒன்று சேர்ந்து தூர் வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2018-06-22 22:45 GMT

மானாமதுரை,

மானாமதுரை அருகே மேலப்பசலை ஊராட்சியைச் சேர்ந்தது கிளங்காட்டூர் கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு நுழையும் இடத்தில் பிள்ளையார் ஊருணி என்று அழைக்கப்படும் ஊருணி ஒன்று சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துஉள்ளது. மழை நீரை நம்பியே உள்ள இந்த ஊருணி வற்றாத ஊருணி என்று அழைக்கப்படுகிறது.

மழைக் காலங்களில் இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள சுற்று வட்டார வயல் வெளிகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் விழும் மழை நீர் வடிந்து இந்த ஊருணிக்கு வந்து சேரும். நூற்றாண்டை கடந்த இந்த ஊருணி பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்ததால் தற்போது அந்த ஊருணியில் சீமைக் கருவேல் மரங்கள் மற்றும் நாணல் புதர்கள் மண்டி பயன்படுத்த முடியாத அளவில் இருந்தது.

கிராம மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கிய ஊருணியை கிராம மக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் தூர் வாருவதற்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இந்த கிராம மக்கள் ஒன்று கூடி இந்த ஊருணியை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி கடந்த 10நாட்களாக கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இந்த ஊருணியை தூர் வாரி, கருவேல மரங்கள், நாணல் புதர்களை அகற்றி சுத்தம் செய்து வருகின்றனர்.

இது குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சடையப்பன் கூறியதாவது:– 6ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஊருணியில் கோடைகாலத்தில் கூட தண்ணீர் வற்றுவது கிடையாது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஊருணியில் மீன்பிடி திருவிழா நடத்தி மக்கள் கலந்துகொள்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக போதிய மழை இல்லாமல் இருந்த நிலையில்கூட இந்த ஊருணியில் தண்ணீர் இருந்தது. இந்த ஊருணியில் மண்டிக்கிடந்த நாணல்புதர்கள் மற்றும் சீமைக்கருவேல் மரங்களை அகற்றி ஊருணியை தூர்வாரினால் இப்பகுதியில் நிலத்தடி நீர் ஊற்று அதிகரிக்கும் என்று சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தவித பயனும் இல்லாமல் இருந்தது.

இதையடுத்து கிராம மக்களே ஒன்றிணைந்து சொந்த செலவில் ஜே.சி.பி.எந்திரம் மற்றும் கிராம மக்களைக் கொண்டு கருவேல மரங்கள், நாணல்களை அகற்றி சுத்தம் செய்துவருகிறோம். தற்போது இந்த ஊருணியை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் மழை காலங்களில் மண சரிந்து மீண்டும் ஊருணிக்குள் விழுந்து தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்புஉள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த ஊருணிக்கு சுற்றுச் சுவர் அமைத்து தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்