கந்தக அமிலம் அகற்றும் பணி 5–வது நாளாக நீடிப்பு: ஸ்டெர்லைட் ஆலையில் வேறு ரசாயனங்கள் உள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு
ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் அகற்றும் பணி நேற்று 5–வது நாளாக நீடித்தது.;
தூத்துக்குடி,
ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் அகற்றும் பணி நேற்று 5–வது நாளாக நீடித்தது. அங்கு வேறு ஏதேனும் ரசாயனங்கள் உள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்வதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
கந்தக அமிலம் அகற்றும் பணிதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மாதம் 22–ந் தேதி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் இறந்தனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். தொடர்ந்து கடந்த 28–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதற்கிடையே ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது.
அதன்பேரில் அதிகாரிகள் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கந்தக அமிலம் இருப்பு வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னரில் கசிவு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து கந்தக அமிலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 18–ந்தேதி முதல் ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
5–வது நாளாக...நேற்று 5–வது நாளாக தொடர்ந்து கந்தக அமிலம் அகற்றும் பணி நீடித்தது. காலையில் 6 டேங்கர் லாரிகள் ஆலைக்கு உள்ளே சென்றன. இந்த லாரிகளில் கந்தக அமிலம் ஏற்றும் பணி நடந்தது. இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:–
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நேற்று முன்தினம் இரவு வரை 52 டேங்கர் லாரிகள் மூலம் 1,110 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளது. இந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கு சுமார் 1,500 டன் வரை கந்தக அமிலம் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனை வெளியேற்றுவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கந்தக அமிலத்தை வாங்குவதற்கு ஏராளமானவர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதனால் விரைந்து கந்தக அமிலம் அகற்றப்படும். இதுதவிர ஆலையில் வேறு என்னென்ன ரசாயனங்கள் மற்றும் பொருட்கள் உள்ளன? எவ்வளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளன? அதனை எவ்வாறு அகற்றுவது? என்பது குறித்தும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.