திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை
திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
தொடக்கக் கல்வி இயக்ககம் மூலம் 2018-19-ம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த 11-ந் தேதி தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகில் டேனிஷ்மிஷன் பள்ளியில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற இருந்தது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி உள்பட 8 மாவட்டங்களில் அதிக காலி பணியிடங்கள் உள்ளதால், தொடக்கக் கல்வி இயக்ககம் திடீரென இந்த 8 மாவட்டங்களில் நடைபெற இருந்த பொது மாறுதலை நிறுத்தம் செய்து உத்தரவிட்டது.
தர்ணா போராட்டம்
இதை அறியாத பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பித்து இருந்த ஆசிரியர்கள் நேற்று காலை திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளிக்கு வந்தனர். கலந்தாய்வு நடைபெறாத தகவல் அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் உடனே நடத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவர்கள் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து அவர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம், இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனு அளித்தனர்.
இதனால் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.