தண்டையார்பேட்டையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

தண்டையார்பேட்டையில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-21 22:35 GMT
பெரம்பூர்,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை நேரு நகர் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து குழாய் மூலம் வினியோகம் செய்வதை நிறுத்தி விட்டு, அந்த பகுதி மக்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் டேங்கர் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் சரியான நேரத்துக்கு வரவில்லை என்றும், அனைவருக்கும் போதிய அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் அந்த பகுதி மக்கள், தண்ணீர் இன்றி அவதிப்பட்டனர். இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் குடிநீர் வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களுக்கு குடிநீர் கேட்டு நேற்று காலை தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி அனைவருக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் அவதிக்கு உள்ளானார்கள்.

குழாய் மாற்ற பள்ளம்

இதேபோல் தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் உள்ள தெருக்களிலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தது. பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தியதில், குடிநீர் குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் கழிவுநீர் கலந்து வருவது தெரிந்தது.

இதையடுத்து பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற அந்த பகுதியில் உள்ள தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் மாற்றும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் அதன்பிறகு குழாய்கள் மாற்றாமல் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. பின்னர் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்து வந்தனர்.

ஆனால் குடிநீர் குழாய் மாற்ற பள்ளம் தோண்டப்பட்ட தெருக்களில் டேங்கர் லாரிகள் செல்ல முடியாததால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை.

முற்றுகையிட்டனர்

இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர், நேற்று தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகரில் உள்ள குடிநீர் வாரிய 38-வது வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய குடிநீர் வாரிய அதிகாரிகள், விரைவில் குழாய் பதிக்கும் பணிகளை முடித்து விடுவதாகவும், அதுவரையில் டேங்கர் லாரிகள் மூலம் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்வதாகவும் உறுதி அளித்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்