மாநிலம் முழுவதும் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த திட்டம்
மாநிலம் முழுவதும் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
மும்பை,
மாநிலம் முழுவதும் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்
மும்பையில் விபத்துகள் மற்றும் எதிர்பாராத உடல்நலக்கோளாறால் பாதிக்கப்படுபவர்களுக்கு சேவையாற்றும் வகையில் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சுகள் செயல்பட்டு வருகின்றன. மும்பையில் மட்டும் 20 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சுகள் இயங்கி வருகின்றன.
தினமும் சுமார் 1500 அழைப்புகள் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சுகளுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பால்கர் மற்றும் மேல்காட் பகுதிகளுக்கு தலா 5 புதிய மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சுகள் வழங்கப்பட உள்ளன.
லண்டன் நகரை முன்மாதிரியாக...
இந்தநிலையில் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சின் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்த அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக மூத்த குடிமகன்களை கருத்தில் கொண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
லண்டன் நகரை முன்மாதிரியாக கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில், முதலுதவி பெட்டி, அடிப்படை மருந்து பொருட்கள் உள்ளிட்டவை சைக்கிள் ஆம்புலன்சில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். மருத்துவ உதவியாளர்கள் சைக்கிளை ஓட்டிக்கொண்டு சம்பந்தப்பட்ட இடத்துக்கே நேரில் சென்று அடிப்படை சிகிச்சைகளை அளிப்பார்கள் என கூறப்படுகிறது. சைக்கிள் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் என கூறி பலர் இதனை வரவேற்றுள்ளனர்.